பிமல் ரத்நாயக்க தலைமையில் ஜே.வி.பி குழு சீனா விஜயம்:

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) சிறப்பு குழு, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் சீனாவுக்கு சென்றுள்ளது.

சீன – இலங்கை பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான பாதையை வகுத்தல், கட்சிகளுக்கு இடையிலான பரிமாற்றங்களை ஆழப்படுத்தல், பரஸ்பர கற்றலின் மூலம் ஒத்துழைப்பை மேம்படுத்தல் மற்றும்  ஆட்சி நிர்வாக அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து பீஜிங் சந்திப்புகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளியுறவுக் கொள்கை மற்றும் உள்நாட்டு அதிகார சமநிலையில் ஏற்பட்டுள்ள நுட்பமான மாற்றங்களை வெளிப்படுத்தும் வகையில், பிரதமர் ஹரிணி அமரசூரியவின் அண்மைய சீனா விஜயத்தைத் தொடர்ந்து, அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் விஜயம் அமைந்துள்ளது. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த அதிகாரிகளுக்கும், தற்போதைய அரசாங்கத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) பிரதிநிதிகள் குழுவிற்கும் இடையே பீஜிங்கில் நடந்த உயர்மட்ட சந்திப்பு, இரு நாடுகளுக்கு இடையேயான அரசியல் மற்றும் மூலோபாய உறவுகளை வலுப்படுத்தும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்தியக் குழுவின் சர்வதேசத் துறையின் தலைவரான லியு ஹைசிஙகை சந்தித்த,  அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையிலான குழு, இரண்டு முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தி ஆழமான கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுத்துள்ளது. இரு நாடுகளின் தலைவர்களால் எட்டப்பட்ட உடன்பாடுகள் மற்றும் புரிதல்களை, குறிப்பாக கட்சிகளுக்கு இடையேயான தொடர்பு பொறிமுறையின் மூலம் நடைமுறையில் செயல்படுத்துவதை உறுதி செய்யும் வகையில் கலந்துரையாடல்களில் அவதானம் செலுத்தப்பட்டது.

கட்சி மற்றும் அரச நிர்வாகத்தில் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதை வலுப்படுத்துதல். இதன் மூலம், நாட்டின் மறுமலர்ச்சி மற்றும் அமைப்பு ரீதியான மாற்றத்தில் கவனம் செலுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு, சீனாவின் விரைவான வளர்ச்சி மாதிரி குறித்த நுண்ணறிவுகளைப் பகிரவும், அதன் நவீனமயமாக்கல் அணுகுமுறையைப் பகிர்ந்துகொள்ளவும் சீன கம்யூனிஸ்ட் கட்சி தயாராக உள்ளமையை இதன் போது சீன குழு வெளிப்படுத்தியுள்ளது.

இந்த இருதரப்பு உறவின் திசை, கடந்த ஜனவரியில் இடம்பெற்ற ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பின் அடிப்படையிலானது என்று சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின்  மத்தியக் குழுவின் சர்வதேசத் துறையின் தலைவரான லியு ஹைசிங் குறிப்பிட்டுள்ளார். இந்த உயர்மட்ட சந்திப்பு, சீன – இலங்கை பகிரப்பட்ட எதிர்காலத்துடன் கூடிய சமூகத்தை கட்டியெழுப்புவதற்கான பாதையை அமைத்ததுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் இதுவொரு முக்கியமான ஒரு மூலோபாய உருவாக்கம் ஆகும். கட்சிகளுக்கு இடையேயான பரிமாற்றங்களை ஆழப்படுத்துவதில் கொடுக்கப்படும் முக்கியத்துவம், தற்போதைய சீன – இலங்கை உறவின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்துள்ளது. மறுபுறம் ஆளும் கட்சிகளிடையே பரஸ்பர புரிதலையும் நம்பிக்கையையும் வளர்ப்பது, நீண்ட கால திட்டங்கள் மற்றும் மூலோபாய பங்காளித்துவத்திற்கு நாடுகளுக்கு  இடையேயான உறவுகளுக்கு ஒரு நிலையான அரசியல் அடித்தளத்தை வழங்கியுள்ளது. இந்த ஈடுபாடு, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் தனது மூலோபாயப் பங்காளித்துவத்தின் தொடர்ச்சி மற்றும் விரிவாக்கத்தை உறுதிப்படுத்த, இலங்கையின் புதிய அரசியல் நிர்வாகத்துடன் நெருங்கிய உறவை வளர்ப்பதில் சீனா தீவிரமாகப் பங்கு வகிப்பதைக் குறிக்கிறது. நிர்வாகப் பரிமாற்றத்தில் கவனம் செலுத்துவது, பாரம்பரிய பொருளாதார ஒத்துழைப்புக்கு அப்பாற்பட்ட, உறவில் ஒரு பரந்த, சித்தாந்தக் கூறுகளை வெளிப்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *