பின்தங்கிய பாடசாலைகளுக்காக அதிக நிதி உதவி ஒதுக்கீடு: பிரதமர்

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் போது, பின்தங்கிய பகுதிகளில் உள்ள பாடசாலைகளின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில் அவற்றுக்கான அதிக நிதி உதவி ஒதுக்கீடு பெறுதல் அவசியமாகும் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜூலை 5ஆம் திகதி, அலரி மாளிகையில் நடைபெற்ற புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கு மாகாண மற்றும் பிராந்திய அளவில் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு குறித்து ஆளுநர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுக்கு விளக்கம் அளிக்கும் கலந்துரையாடலில் உரையாற்றும் போது, பிரதமர் இதனை வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் மேலும் உரையாற்றிய பிரதமர்,

”கவனமாக திட்டமிடப்பட்ட கல்வி சீர்திருத்தங்களை பற்றி கலந்துரையாடி, நடைமுறைப்படுத்துவதற்கு மாகாண சபைகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் எனக் குறிப்பிட்டார்.

தேசிய கொள்கைகளையும், மாகாண சபை நடைமுறைகளையும் இணைத்து, இந்த கல்விச் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். கல்விக் கொள்கைகளில் வேறுபாடுகள் ஏற்படாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதை நன்கு உணர்ந்திருக்கின்றோம். குறிப்பாக, இந்த கல்வி சீர்திருத்தங்களின் இலக்கு கல்வியின் தரத்தை உயர்த்துவதாகும். இந்த செயல்முறையின் இறுதி பயனாளர்கள் மாணவர்களும், அவர்களின் பெற்றோர்களும், குடும்பங்களுமாக இருக்க வேண்டும். எடுக்கும் அனைத்து முடிவுகளும் பிள்ளைகளை மனதில் வைத்தே எடுக்கப்பட வேண்டும்.

கல்விச் சீர்திருத்தத்தின் போது எதிர்கொள்ள வேண்டிய இரண்டு முக்கிய சவால்கள் உள்ளன.
ஒன்று, தற்போதைய கல்வி முறையை மாற்றி அமைப்பது.

அடுத்தது, சீர்திருத்தம் நடைபெறும் காலத்திலும் தற்போதைய நடைமுறைகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்னெடுப்பது.

நீண்டகாலமாக எடுக்கப்பட்ட முடிவுகளால் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்கும் அதே வேளையில், இந்த சீர்திருத்தங்களை செயல்படுத்த வேண்டிய நிலை உள்ளது.

பாடசாலைகளின் வழமையான பணிகளை முன்னெடுக்கும் போது, கொள்கை தொடர்பான விடயங்களில் இனக்கப்பாட்டுடன் செயல்பட வேண்டிய அவசியத்தை பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.

இந்த நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் கலாநிதி மதுர செனெவிரத்ன, தொழில்நுட்பக் கல்வி பிரதி அமைச்சர் நளின் ஹேவகே, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுததந்திரி, கல்வி அமைச்சு செயலாளர் நாளக்க களுவெவ, மாகாண ஆளுநர்கள், மாகாணச் செயலாளர்கள், மாகாணக் கல்வி பணிப்பாளர்கள், திறைசேரி, நிதிக் குழு மற்றும் கல்வி அமைச்சின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *