‘பாலஸ்தீனம் ஒரு உரிமை, பரிசு அல்ல’ – ஐ.நா. பொதுச்செயலாளர் :

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையிலான மோதல் குறித்து விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நடைபெற்ற உறுப்பு நாடுகள் கூட்டத்தில், ஐக்கிய நாடுகள்  பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், பாலஸ்தீன நாடு என்பது ஒரு உரிமை, அது பரிசு அல்ல என்று வலியுறுத்திப் பேசினார்.

பல தலைமுறைகளாகத் தீர்க்கப்படாமல் உள்ள இந்த மோதலில், பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை இழந்துவிட்டன. ஐ.நா. தீர்மானங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் புறக்கணிக்கப்படுகின்றன என்று குட்டெரெஸ் வருத்தத்துடன் தெரிவித்தார்.

இந்த மோதலுக்கு ‘இரு நாடுகள்’ என்பதே ஒரே தீர்வு என்றும், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் ஆகிய இரண்டு இறையாண்மை கொண்ட, சுதந்திர மற்றும் ஜனநாயக நாடுகள் தங்கள் அங்கீகரிக்கப்பட்ட எல்லைகளுக்குள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. தீர்மானங்களின்படி, இரு நாடுகளும் ஜெருசலேம் நகரைத் தலைநகராகக் கொண்டிருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

ஹமாஸ் அமைப்பை இலக்காகக் கொண்டு, காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில், இதுவரை 63,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் குழந்தைகள், பெண்கள் மற்றும் ஹமாஸ் அமைப்பினரும் அடங்குவர். உணவு மற்றும் இருப்பிடம் இல்லாமல் தவிக்கும் பாலஸ்தீனியர்கள், பட்டினியாலும் நோய்த்தொற்றுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குட்டெரெஸ், ஒரு பாலஸ்தீன நாட்டை அங்கீகரிக்க மறுப்பது பயங்கரவாதத்திற்குப் பரிசளிப்பது போன்றது என்றும், இரு நாடுகள் இல்லாமல் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமில்லை என்றும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *