மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட நால்வரையும் பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இன்று செவ்வாய்க்கிழமை (08) உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட நால்வரும் கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களில் மூவர் தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் மற்றையவர் 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், சந்தேக நபர்களுக்கு எதிராக வெளிநாட்டு பயணத்தடையும் விதித்து நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இலங்கை சுங்கத்தின் அனுமதியின்றி மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தில் சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்ட 177 வாகனங்கள் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க உள்ளிட்ட நால்வரும் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.