புதிய பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய புதிய வாகன இலக்கத்தகடுகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (26) பாராளுமன்றத்தில் வாய்மூல வினாக்களுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
தற்போது சந்தையில் வாகன இலக்கத்தகடுகள் இல்லாத பெருமளவான வாகனங்கள் உள்ளன.
முந்தைய வர்த்தக நிறுவனங்களுடன் அரசியல் நடவடிக்கை, ஊழல் மற்றும் பொறுப்பற்ற தன்மையால் மோட்டார் வாகனத் திணைக்களம் சுமார் 10 ஆண்டுகளாக முன்னேறவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
புதிய சாரதி அனுமதிப் பத்திரம் தயாரிக்கப்படும் என்றும், வாகன இலக்கத்தகடுகள் இல்லாத வாகனங்களுக்கு அடுத்த வாரம் தற்காலிக தீர்வுகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.