உலகளவில் உள்ள புராதான சின்னங்களுக்கு, யுனெஸ்கோ அங்கீகாரம் வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில், தஞ்சை பெருவுடையார் கோயில், ஜெயகொண்டம் கங்கை கொண்ட சோழபுரம் கோயில், கும்பகோணம் ஐராவதேஸ்வரர் கோயில், மாமல்லபுரம் நினைவுச் சின்னங்கள், நீலகிரி மலை ரயில் பாதை ஆகிய 5 இடங்களை உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அங்கீகரித்திருந்தது. செஞ்சி கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் இந்த பட்டியலில், ஆறாவதாக செஞ்சிகோட்டையும் இடம் பிடித்துள்ளது.
முன்னதாக மராத்தியர்கள் ராணுவ தளங்களை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்குமாறு மத்திய அரசு யுனெஸ்கோவிற்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்த பரிந்துரையை ஏற்று, யுனெஸ்கோ பிரதிநிதி ஹவாஜங் லீ ஜகாம்ஸ் இந்தியா வந்து அந்த தளங்களை ஆய்வு செய்துவிட்டு சென்றார்.
இந்நிலையில், பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடைபெற்று வரும் யுனெஸ்கோ உலக பாரம்பரிய குழுவின் 47-ஆவது அமர்வில், மராத்திய ராணுவ தளங்களை உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகரித்தது.
இதன் மூலம், மஹாராஷ்டிராவில் உள்ள 11 தளங்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சிகோட்டை ஆகிய 12 தளங்களும் உலக பாரம்பரிய சின்னமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற உலக பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44-ஆக உயர்ந்தது.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த செஞ்சிக்கோட்டையை, 1190 ஆம் ஆண்டில் அனந்தக்கோன் என்பவர் கட்டியதாக கூறப்படுகிறது.
அதன் பிறகு, விஜயநகர பேரரசு, நாயக்கர்கள், பீஜப்பூர் சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், பிரெஞ்சுகாரர்கள், பிரித்தானியர்கள் என பலரின் ஆளுகையின் கீழ் இந்த கோட்டை இருந்துள்ளது.
இந்த கோட்டைக்கு இயற்கை அரணாக கோட்டையை சுற்றி, 3 பெரிய மலைகள், 2 சிறிய குன்றுகள், 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர், 80 அடி அகலம் உள்ள அகழிகளுடன், செஞ்சிக்கோட்டை முக்கோண வடிவத்தில் அமைந்துள்ளது.
செஞ்சிக் கோட்டையில் கோவில்கள், மண்டபங்கள், குளங்கள், சுனைகள், படைவீரர்கள் தங்கும் பகுதி, நெற் களஞ்சியம், எதிரிகள் கடக்க முடியாத ஆழமான, அகலமான அகழிகள், 8 மாடிகளைக் கொண்ட கல்யாண மஹால், தானியக் களஞ்சியம், சிறைச் சாலை, படையினர் பயிற்சிக்கூடம், செஞ்சியம்மன் கோயில், ஆனைக்குளம் எனப்படும் புனிதக் குளம் ஆகியவை உள்ளது.
கீழ்க் கோட்டைக்கு செல்ல இரண்டு வாயில்கள் உள்ளன. அதில் வடக்கில் உள்ள வாயில் வேலூர் வாயில் என்றும், கிழக்கில் உள்ளது பாண்டிச்சேரி வாயில் என்றும் அழைக்கப்படுகின்றன.
இந்த இரண்டில் எதன் வழியாக சென்றாலும் 24 அடி அகலமும், 60 அடி ஆழமும் கொண்ட ஒரு கணவாயைத் தாண்டிச் செல்லவேண்டும்.
இங்கு, போர் முற்றுகைக்காலத்தில் எதிரிகள் உள்ளே நுழையாதவாறு தடுக்கும் இழுவைப்பாலம் உள்ளது. போர்காலத்தில் கோட்டைக் காவலர்கள் இந்த பாலத்தை அகற்றிவிடுவர்.
அப்போது எதிரிகள் உள்ளே நுழைய இயலாமல் திண்டாடுவர். இதன் காரணமாகவே, நாட்டின் மிகவும் பாதுகாப்பான கோட்டைகளில் ஒன்றாக செஞ்சிக் கோட்டை கருதப்படுகிறது.
யுனெஸ்கோ அங்கீகாரம் கிடைத்துள்ளதால், இந்த கோட்டைக்கு பெரியளவில் நிதி உதவி கிடைப்பதுடன், பெரிய சுற்றுலா தளமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.