ஏற்றுமதித் துறையில் உள்ள பிரச்சினைகள் குறித்து ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைப் பெறுவதற்காக, பெருந்தோட்டத் துறை தனியார் வர்த்தகர்களுடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட பூர்வாங்கக் கலந்துரையாடல் நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.
குறிப்பிடத்தக்க அளவு அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரித்துக்கொள்ளவும், பொருளாதாரத்தில் ஓரளவு ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், இலங்கை அரசாங்கத்தால் தற்போது முடிந்துள்ளது. இருப்பினும், நாட்டின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு மிகவும் முக்கியமான டொலர் கையிருப்பை வலுப்படுத்தும் சவாலை வெற்றிகொள்ள வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையினரின் கருத்துக்களைப் பெறுவதே இந்தக் கலந்துரையாடலின் நோக்கமாகும்.
வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையாளர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையாளர்களுக்கு அரசாங்கம் வழங்கும் வசதிகளுக்கு ஏற்ப நியாயமான வரி செலுத்தப்பட வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.
கட்டுப்பாடுகள் மூலம் பொருளாதாரத்தை மட்டுப்படுத்த முடியாது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, சுருங்கி இருந்த பொருளாதாரத்தை விரிவுபடுத்தி முன்னோக்கி கொண்டு செல்ல தற்போதைய அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் இங்கு வலியுறுத்தினார்.
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தியதன் ஊடாக அரசாங்கத்தின் டொலர் கையிருப்பிற்கு ஏற்படும் பாதிப்பை தவிர்த்து, டொலர் கையிருப்பின் ஸ்திரத்தன்மையைப் பேணுவதற்காக ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதற்காக அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட வேலைத்திட்டத்தைக் கொண்டுள்ளது என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேயிலை, தென்னை மற்றும் இறப்பர் ஆகிய பயிர்ச்செய்கை ஏற்றுமதி தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், அந்தத் துறைகளில் தற்போது எழுந்துள்ள சவால்கள் மற்றும் பிரச்சினைகள் பற்றியும் அவற்றை வெற்றிகரமாகத் தீர்ப்பதற்கான முன்மொழிவுகளையும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற பிரதிநிதிகள் ஜனாதிபதியிடம் முன்வைத்தனர். நிலவும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளை பெற்றுத் தருமாறும் அவர்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு, ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தலைவர் மங்கள விஜேசிங்க ஆகியோருடன் தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை தொழில்துறையுடன் தொடர்புடைய தனியார் துறை வர்த்தகர்கள் மற்றும் ஏற்றுமதித் தொழில்துறை பிரதிநிதிகள் குழுவினரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.