ஜேர்மனியின் புதிய சேன்சலராக ஃப்ரெட்ரிக் மெர்ஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஜேர்மன் நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில், கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் புதிய சேன்சலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட வாக்கெடுப்பில் அவர் பெரும்பான்மையை பெற முடியாதது, போருக்குப் பிறகான ஜேர்மனி வரலாற்றில் இது முதல் முறை என்ற பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மெர்ஸ் தலைமையிலான CDU/CSU கூட்டணி, நடுத்தர இடதுசாரியான சோஷியல் டெமோக்ரட்ஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைத்து, பிப்ரவரி மாத கூட்டாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது.
இந்த கூட்டணி, ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சியை தூண்ட நிறுவன வரிகளை குறைக்கும், ஆற்றல் விலைகளை சீராக்கும் திட்டங்களை வகுத்துள்ளது. மேலும், உக்ரைனுக்கு ஆதரவு மற்றும் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்கவும் உறுதி கூறியுள்ளது.
69 வயதான மெர்ஸ், 1989-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கியவர். ஆனால் இது வரை எந்தவொரு அரசு பதவியிலும் இருக்காத இவர், இப்போது முதன்முறையாக சேன்சலராக பொறுப்பேற்கிறார்.
முந்தைய அரசு அமைச்சர் குழுவில் இருந்து ஒரே ஒருவராக பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் மீண்டும் பதவி வகிக்கிறார். மற்ற அமைச்சர்கள் அனைவரும் புதியவர்கள். இவர்களில் பலர் தனியார் துறையில் அனுபவம் கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.