இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் இன்று (04) செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிட்டனர்.
மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர்களான கலாநிதி ஜகன் குணத்திலாக, பேராசிரியர் தை. தனராஜ் மற்றும் பேராசியர் பாத்திமா பர்ஷான ஹனீபா ஆகியோருடன் மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் த, கனகராஜ் உள்ளிட்ட குழுவினரே நேரில் பார்வையிட்டனர்.
அதன்போது புதைகுழி அகழ்வு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் மற்றும் அங்கிருந்த துறைசார் நிபுணர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
புதைகுழிகளை நேரில் பார்வையிட்டு ஊடகவியலர்களிடம் கருத்து தெரிவித்த ஆணையாளர்கள், அகழ்வு பணிகள் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்பிலும் தகவல் பெற்றுள்ளோம். மனித புதைகுழிகள் தொடர்பிலான சாட்சிகளுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதற்கு ஆணைக்குழு தயார் என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், 1996-97 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரின் விசாரணைகள் குறித்து 2003 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கை மனித உரிமை ஆணைக்குழு அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இதுரை 130 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.