செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல்:

செஞ்சோலைப் படுகொலையின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் அமைந்துள்ள சுற்றுவட்டத்தில் வியாழக்கிழமை (14) நடைபெற்றது.

இதன்போது கொல்லப்பட்டவர்களின் உருவப் படங்களுக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. நினைவேந்தல் நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

புதுக்குடியிருப்பு, வள்ளிபுனம் பகுதியில் இருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது கடந்த 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் 14ஆம் திகதி விமானப் படையினர் மேற்கொண்ட விமானக் குண்டு வீச்சில் 54 மாணவிகளும் 7 பணியாளர்களுமாக 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். 150 இற்கும் மேற்பட்ட மாணவிகள் படுகாயமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கடந்த 2006.08.14 அன்று இலங்கை விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 53 மாணவியர்களுக்கு, நான்கு பணியாளர்களுக்குமான 19 ஆம் ஆண்டு நினைவேந்தல், படுகொலைச் சம்பவம் இடம்பெற்ற வள்ளிபுனம் இடைக்கட்டு பகுதியில் (செஞ்சோலை வளாகத்தில்) வியாழக்கிழமை 14 அன்று காலை உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது .

இந்த நினைவேந்தல் நிகழ்வில், சுடரேற்றப்பட்டு, மலர்தூவி உணர்வெழுச்சியுடன் நினைவேந்தல் இடம்பெற்றது நிகழ்வில் உயிரிழந்த பிள்ளைகளின் உறவினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் புதுக்குடியிருப்பு பிரதேசசபை தவிசாளர் வே.கரிகாலன் பிரதேச சபை உறுப்பினர் சி.குகநேசன் முன்னாள் கரைச்சி பிரதேச சபைஉறுப்பினர் ச.ஜீவராசா சமூக செயற்பாட்டாளர் த.யோகேஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *