சத்துருக்கொண்டான் படுகொலை புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்று மட்டக்களப்பு மாநகர சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகரசபையின் 3ஆவது மாதாந்த அமர்வு முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் கூடிய போது, குறித்த படுகொலையின் 35ஆவது ஆண்டு நினைவேந்தலையிட்டு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனையடுத்து தமிழரசு கட்சி உறுப்பினர் தயாளன் கௌரி சத்துருக்கொண்டான் படுகொலைக்கு நீதிகோரியும் புதைகுழி தோண்டப்பட வேண்டும் என்றும் பிரேரணை ஒன்றை முன்வைத்தார்.
“உண்மை ஒருநாளும் உறங்காது. செம்மணி புதைகுழி தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதுபோல் சத்துருக்கொண்டான் படுகொலை செய்யப்பட்ட அப்போதைய இராணுவ முகாம் இருந்த இடமும் தோண்டப்பட வேண்டும்’ என்று அவர் கோரியிருந்தார்.
இந்தநிலையில் குறித்த பிரேரணைக்கு சகல உறுப்பினர்களும் ஆதரவளித்த நிலையில், அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.