சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்குமாறு வட மாகாண ஆளுநர் வலியுறுத்து!

சட்டவிரோத கட்டுமானங்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளை தொடர்ந்தும் உள்ளூராட்சிமன்றங்களை முன்னெடுக்குமாறும் அதை ஒருபோதும் யாருக்காகவும் நிறுத்தவேண்டாம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

உள்ளூராட்சி மன்றங்களின் செயலர்களுடனான மாதாந்தக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்றது. 

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், சில உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்களுக்கான அமைப்பே உள்ளூராட்சிமன்றம் என்பதை நினைவிலிருத்திச் செயற்படவேண்டும் என வலியுறுத்திய ஆளுநர், சோலைவரி மாற்றம், கட்டட அனுமதி உள்ளிட்ட விடயங்களை எவ்வளவு விரைவாக செய்து கொடுக்க முடியுமோ அதைச் செய்து கொடுக்குமாறு வலியுறுத்தினார்.

இதன் பின்னர் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதனால், வீதிப்பாதுகாப்பும் கழிவு முகாமைத்துவமும் தொடர்பான விளக்கமளிப்பு இடம்பெற்றது. உள்ளூராட்சி மன்றங்கள் கவனம் செலுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

கழிவு முகாமைத்துவம் தொடர்பான விடயத்தில் குப்பைகளை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்குவதில் பின்னடிக்கும்போக்கு அவதானிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சிமன்றங்களின் செயலாளர்கள், உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் குறிப்பிட்டனர். கண்டி மாவட்டத்தில் உணவு பொதி செய்வதற்கு அல்லது உணவை உண்பதற்கு பயன்படுத்தப்படும் ‘லஞ்ச் சீற்றை’ துப்புரவு செய்து கொடுத்தாலேயே உள்ளூராட்சி மன்றங்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைமை இருக்கின்றது என்பதைச் சுட்டிக்காட்டிய ஆளுநர் இங்கு இவ்வாறான இறுக்கமான நடைமுறைகளை சபை உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் தீர்மானங்களை நிறைவேற்றி நடைமுறைப்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டார்.

வீதிகளில் குப்பைகளைப் போடுபவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்களால், எந்தெந்த வீதிகளில் எந்த நேரத்தில் சுற்றுச்சூழல் பொலிஸாரின் சுற்றுக்காவல் நடவடிக்கை தேவை என்ற விவரங்களை வழங்குமாறும் அதற்கு அமைவாக நடவடிக்கை எடுப்பதாக சுற்றுச்சூழல் பொலிஸார் குறிப்பிட்டனர். மேலும், யாழ். மாநகர சபையில், குடியிருப்பார்களுக்கு அட்டை வழங்கி முன்னெடுக்கப்பட்டு வரும் கழிவகற்றல் பொறிமுறையை ஏனைய உள்ளூராட்சி மன்றங்களிலும் முன்னெடுக்குமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

மேலும், மின்கம்பங்களில் ஏறி மின்விளக்குகள் பொருத்துதல் மற்றும் திருத்துதல் ஆகிய பணிகளைச் செய்வதற்கு உள்ளூராட்சி மன்றங்களால் வழங்கப்பட்ட 38 பணியாளர்களின் பெயர்ப்பட்டியல் பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அவர்களுக்கான பயிற்சிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு தெரிவித்தார்.

தொடர்ந்து ஏனையோருக்கு அடுத்த கட்டமாக பயிற்சிகள் வழங்கப்படும் எனக் குறிப்பிட்டார். மேலும், உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கான பயிற்சிகள் வழங்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இங்கு தெரிவித்தார். இந்தப் பயிற்சிகள் வழங்கப்பட்ட பின்னர் அனைத்துச் சபைகளினதும் தவிசாளர்கள், மேயர் உள்ளிட்டோரைச் சந்திக்கவுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் திருமதி தனுஜா முருகேசன், ஆளுநரின் செயலாளர் சி.சத்தியசீலன், உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ.சோதிநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி தேவநந்தினி பாபு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா மாநகர சபை ஆணையாளர்கள், 5 மாவட்டங்களினதும் உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள், நகர சபைச் செயலாளர்கள், பிரதேச சபைகளின் செயலாளர்கள், சுற்றுச்சூழல் பொலிஸார் ஆகியோர் பங்கேற்றனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *