இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைக்கு இணங்க, தமதும் மற்றும் தமது குடும்ப உறுப்பினர்களின் சொத்துக்களையும் தடை செய்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் விடுத்துள்ள உத்தரவை, செல்லுபடியற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ள மூன்று மனுக்களை உயர்நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அவரது மனைவி குசும் பிரியதர்ஷனி யாப்பா, அவரது மகளான சந்துல ரமாலி ரம்புக்வெல்ல, மகளின் கணவரான இசுறு புலஸ்தி பண்டார பொல்கஸ்தெனிய ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மூன்று மனுக்களையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்காமல் நீதிமன்றம் அவற்றை நிராகரித்துள்ளது.இலஞ்ச ஊழல் ஆணைக்குழு சார்பில் நீதிமன்றத்தில் நேற்று (03) ஆஜராகியிருந்த சட்டப் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்வைத்த நீண்ட விளக்கங்களை கவனத்திற் கொண்ட நீதிபதிகள் குழாம், மேற்படி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேற்படி வேண்டுகோளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் வகையில், அதில் உள்ள விடயங்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்க மனுதாரர்களால் முடியாது போயுள்ளது.
இந்நிலையில் பிரதிவாதிகளுக்கு அழைப்பாணை விடுக்குமாறு விடுக்கப்பட்டிருந்த கோரிக்கை நீதிபதிகள் குழாமினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
மேற்படி மனுக்களில் பிரதிவாதிகளாக கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் அதன் ஆணையாளர் நாயகம், ஆணைக் குழுவின் இரண்டாவது விசாரணை பிரிவின் உதவிப் பணிப்பாளர் மற்றும் ஆணைக் குழுவின் தலைவர் உள்ளிட்ட ஆணையாளர்கள் பெயரிடப்பட்டுள்ளனர்.
இதன் போது மனுதாரர் மூவரது பெயரில் தனியார் வங்கிகளில் காணப்படும் 44 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுள்ள நிலையான இரண்டு வைப்புக்கள், ஆயுட்கால காப்புறுதி, மனுதாரரின் சார்பில் ஏனைய வங்கிகளில் காணப்படும் நிலையான வங்கிக் கணக்குகள், சேமிப்புக் கணக்குகள், 100 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுள்ள சொகுசு வாகனம் உள்ளிட்ட, தடை செய்யப்பட்ட பல சொத்துக்கள் தொடர்பில் மேற்படி மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தன .
மேற்படி மனு தொடர்பில் அடிப்படை விடயங்களை கவனத்திற் கொண்டதையடுத்து, ஜனக் டி. சில்வா,கே பிரியந்த பெர்னாண்டோ, சம்பத் பி அபேகோன் ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் மூலம் மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.