பல வருடங்களாக இயங்காமல் இருக்கும் கிளிநொச்சி மகளிர் சிகிச்சை நிலையத்தை மீள இயங்க செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், அதற்குரிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (செப்டெம்பர் 23) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான கேள்வி வேளையின் போது ஆளும் கட்சி உறுப்பினர் ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தியால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கேள்வியெழுப்புகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் நெதர்லாந்து அரசாங்கத்தால் கட்டப்பட்ட சிறப்பு மகளிர் சிகிச்சை நிலையமானது பல ஆண்டுகளாக இயங்காமல் இருக்கின்றது.
இதனை நாங்கள் சென்று பார்த்தோம். அங்கே இலங்கையில் எங்கும் இல்லாத ஸ்கேன் மற்றும் கதிரியக்க இயந்திரங்கள் உள்ள போதும். அவற்றில் சில உபகரணங்கள் காலாவதியாகியுள்ளன.
சுகாதார அமைச்சுசார் ஆலோசனை கூட்டத்தில் இவ்விடயம் கலந்துரையாடப்பட்டது. அதன்போது வடமாகாணத்தில் சுழற்சி முறையில் ஆளணிகளை ஈடுபடுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறப்பட்டது.
சுகாதார அமைச்சர் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் அவதானம் செலுத்தி நீண்ட காலமாக இயங்காமல் இருக்கும் வைத்தியசாலைகளை உடனடியாக இயக்கவும், ஆளணிகளை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதன்மூலம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட கர்ப்பிணிகள் உள்ளிட்ட பெண்கள் சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ,
இந்த பிரச்சினை உண்மையானதே. அங்கே கட்டிடங்கள், உபகரணங்கள் இருந்தாலும் ஆளணி போதுமானதால் இல்லை.
இலங்கைக்கு வரும் விசேட வைத்தியர்களை அங்கு அனுப்பினாலும் அவர்கள் இலங்கையில் தொடர்ந்தும் தங்கியிருப்பது தொடர்பிலும் பிரச்சினைகள் உள்ளன.
எவ்வாறாயினும் நிறைவுகாண் ஊழியர்களை நாங்கள் பயிற்றுவித்து வருகின்றோம். இதனூடாக அங்கு ஆளணியை பூர்த்தி செய்ய முடியுமென்று நினைக்கின்றேன்.
கிளிநொச்சி பெரிய வைத்தியசாலை தொடர்பிலும் நாங்கள் அவதானம் செலுத்தியுள்ளோம். அங்குள்ள குறைபாடுகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.