ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் –  பிரதமர் ஹரிணி அமரசூரிய 

“சகல குடிமக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படுகின்ற ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே எமது அரசாங்கத்தின் நோக்கமாகும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

நேற்று சனிக்கிழமை (25) கொழும்பு இலங்கை மன்றத்தில் நடைபெற்ற ‘கலாநிதி ரொனால்ட் சில்வாவிற்கு அப்பால் – இலங்கையின் கலாசார பாரம்பரியத்தில் புதிய திசைகளை வகுத்தல்’ எனும் தொனிப்பொருளிலான 2025 தேசிய மாநாட்டின் ஆரம்ப விழாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டு உரையாற்றுக்கையிலேயே இதனை தெரிவித்தார்.

25 மற்றும் 26 ஆகிய இரு நாட்களிலும் நடைபெறும், மத்திய கலாசார நிதியம் மற்றும் சர்வதேச நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்கள் பற்றிய சபை (ICOMOS) ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த இந்தத் தேசிய மாநாடு, மூத்த புத்திஜீவிகளுக்கும், தொழில்சார் வல்லுநர்களுக்கும், வளர்ந்து வரும் அறிஞர்களுக்கும் இலங்கையின் கலாசார மரபுரிமைகள் குறித்து அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுவதற்கும், கல்விசார் ஆராய்ச்சிகளைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஒரு மேடையை உருவாக்குகின்றது.

தேசிய மரபுரிமைகளுக்கான நிலையான நிதி வழங்குதலின் முன்னோடியாகச் செயற்பட்டு, சர்வதேச தரத்திலான முன்மாதிரியாகத் திகழ்ந்த, தொல்பொருள் ஆய்வாளர், நிர்வாகி மற்றும் நிறுவனத்தை கட்டியெழுப்பியவர் என்ற வகையில், இலங்கையின் மரபுரிமைகளைப் பாதுகாப்பதற்காக மத்திய கலாசார நிதியத்தை ஸ்தாபிப்பதில் கலாநிதி ரொனால்ட் சில்வா அவர்கள் ஆற்றிய காலத்தால் அழியாத சேவையை, மத்திய கலாசார நிதியத்தின் தற்போதைய தலைவரான பிரதமர் அவர்கள் பாராட்டினார்.

இதன்போது, ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்திய பிரதமர், ‘எமது அரசாங்கத்தின் நோக்கம், இனத்துவம் , மதம், மொழி அல்லது இருப்பிடம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாத சகல குடிமகனின் உரிமைகளும் பாதுகாக்கப்படும் ஒரு ஐக்கிய இலங்கையைக் கட்டியெழுப்புவதே ஆகும்,’ எனத் தெரிவித்தார்.

இலங்கையின் மரபுரிமையானது அனைவருக்கும் சொந்தமானது என்றும், அதைப் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்திய பிரதமர், நாடெங்கும் இருக்கின்ற அச்சுறுத்தலுக்கு உள்ளாகத் தக்க மரபுரிமைத் தலங்களைப் பாதுகாப்பதற்கு, புதிய தொழில்நுட்பம், டிஜிட்டல் கருவிகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலையை மாற்றியமைக்கும் உத்திகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

மத்திய கலாசார நிதியம் (CCF), நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச சபை (ICOMOS) ஆகியவற்றால் முன்னெடுக்கப்படும் பணிகளைப் பாராட்டிய பிரதமர் அவர்கள், அவற்றின் ஒத்துழைப்பு, இலங்கையின் மரபுரிமைகள் எதிர்நோக்கும் உலகளாவிய சவால்களிலிருந்து பாதுகாப்பதற்கும், எதிர்கால சந்ததியினருக்காக கலாசார பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்கும் உதவும் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், பொலன்னறுவையில் அமைந்திருக்கும் ‘திவங்க உருவக் கூடம்’ என்ற நூல் வெளியிட்டு வைக்கப்பட்டதோடு அதன் பிரதி பிரதமருக்கு வழங்கப்பட்டது. அத்துடன், நினைவுச்சின்னங்கள் மற்றும் தளங்களுக்கான சர்வதேச சபையின் (ICOMOS) முதலாவது ஆசியத் தலைவராக கலாநிதி ரொனால்ட் சில்வா தெரிவு செய்யப்பட்டதன் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஞாபகார்த்த  தபால் முத்திரையும், முதல்நாள் தபால் உறையும் வெளியிடப்பட்டன.

இந்நிகழ்வில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிந்தும சுனில் சேனவி, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலன் கூரே, வெளிநாட்டுத் தூதுவர்கள், திருமதி ரொனால்ட் சில்வா மற்றும் அறிஞர்கள், தொழில்சார் வல்லுநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *