40ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காகத் திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளியை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதர் ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி. சுப்ரமணியம் ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசாங்கம் ஆதரிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிர்வாகத்தால் முடக்கப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும் என்று கலாநிதி தயான் ஜயதிலக்க தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்ச்சியாக தாமதிக்கப்பட்டு வரும் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் தீர்மானம், அதன் முகப்புரையில் அரசியல் அதிகாரப் பரவலாக்கல் குறித்த தனது உறுதிப்பாடுகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அழைப்பு விடுப்பதாக குறிப்பிட்டுள்ளது. அது நல்லிணக்கம் மற்றும் மக்கள் அனைவரும் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்கு வழிவகுக்கும் என்றும் மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது உட்பட, உள்ளூர் நிர்வாகத்தை மதிக்குமாறு அரசாங்கத்தை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது.
மாகாண சபைத்தேர்தல்களை நடத்தவும் அத்தேர்தல் தடைப்பட்டிருப்பதற்கு காரணமாக இருக்கும் சட்ட விடயத்தினை தீர்க்கவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
தற்போதுகூட, தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் தனிநபர் தீர்மானத்தின் மூலம் சட்டச் சிக்கலுக்கான தீர்வினைக் காணமுடியும்.
அதுமட்டுமன்றி, மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதால் ஆட்சியாளர்களுக்கு நெருக்கடிகள் ஏற்படுத்தலாம் என்ற அச்சம் காணப்படலாம். ஆனால் அரசியல் ரீதியாக மிகவும் விலையுயர்ந்ததாகவும், சர்வதேச ரீதியாக அழுத்தங்கள் ஏற்படுத்தக்;கூடிய போர்க்காலப் பொறுப்புக்கூறல் பிரச்சினைகளில் காணப்படுகின்ற நெருக்கடிகளை குறைப்பதற்கு அதுவழிவகுக்கும். உதாரணமாக கூறுவதாக இருந்தால் அயர்லாந்தின் வெற்றிகரமான தேர்தல் முன்னெடுப்புக்களால் வெள்ளிக்கிழமை ஒப்பந்தத்தில் பொறுப்புக்கூறல் அம்சம் எதுவும் இருக்கவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது.
இதேவேளை, சிங்கள மொழி ஊடகவியலாளர் சம்பத் தேசப்பிரிய, பெலவத்தையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஜே.வி.பி. தலைவர்கள் 13ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபைகளை ஒழிப்பதற்காக ஒரு சர்வஜன வாக்கெடுப்பு நடத்துவதற்கான யோசனையைப் முன்னெடுப்பதாகவும் அதற்காகவே மாகாணங்களுக்கான தேர்தலைத் தவிர்ப்பதாகவும் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதேநேரம், வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய முதலீட்டாளர்களுக்கு வழங்கப்பட்ட பெரிய பொருளாதார வாய்ப்புக்களைப் பயன்படுத்தி, இந்தியாவின் எதிர்ப்புகளை, தவிர்க்கலாம் என்றும் அதன் ஊடாக மேற்கத்திய நாடுகளின் எதிர்ப்புகளையும் நடுநிலையாக்க முடியும் என்றும் ஜே.வி.பி. நம்பலாம்.
ஆனால் உண்மையில் ஆட்சியாளர்களுக்கு உடனடியாக மாகாண தேர்தல் நடத்துவவதானது, தாமதமாக நடப்பதை விடச்சிறந்ததாக இருந்தாலும், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அக்கட்டமைப்பை ஒழிப்பதானது, தேசிய மக்கள் சக்திக்கு கணிமான செல்வாக்கு இழப்பையே ஏற்படுத்தும்.
40 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்காக திறந்துவிட்ட மாகாண அரசியல் வெளி இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவராக இருந்த ஜி.பி. பார்த்தசாரதியின் இளம் உதவியாளராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்ரமணியம் ஜெய்சங்கர் உட்பட இந்திய அரசாங்கம் ஆதரிக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிர்வாகத்தால் மூடப்படுவது இந்திய இராஜதந்திரத்தின் முரணாகும்.
ஒருவேளை தமிழ் மக்களுக்கான அரை-சுயாட்சி அரசியல் வெளியான மாகாண சபை முறைமையானது, இந்தியா, மற்றும் அநுரகுமார அரசாங்கத்தின் கூட்டு இலாபங்களை அடைவதற்காகவும் மூலோபாயத் தடயத்திற்காகவும் பண்டமாற்று செய்யப்பட்டிருக்கலாம்.
ஆனால் சீனா எப்போதும் இலங்கைக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றியே உள்ளது. ஆனால் இந்தியா வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் குறித்த அளித்த உறுதிப்பாட்டை நட்புரீதியான, நன்றியுள்ள அரசாங்கம் ஆட்சியில் இருந்தபோதிலும், அதனை நிறைவேற்றுவதற்கு தவறவிட்டதாகத் தெரிகிறது.
ஆகவே, தமிழர்களின் நகர்வு டெல்லி மற்றும் கொழும்பை விடுத்து துணைப்பிராந்திய அல்லது அதற்கும் அப்பாலாகச் செல்லும் போது, அநுரகுமாரவால் உருவாக்கப்பட்ட இந்திய இராஜதந்திரத்தால் புறக்கணிக்கப்பட்ட அரசியல் வெற்றிடத்தின் அபாயங்கள் வெளிப்படையாகத் தெரியும், அச்சமயத்தில் அதனை மாற்றியமைப்பதற்கான நிலைமை மிகவும் தாமதமாகியதாகவே இருக்கும்.
மேலும், தற்போதைய நிலையில் மாகாண சபைகள் அரச நிலங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தாவிட்டாலும், மாகாண சபைகளின் முடக்கம், திருகோணமலையில் இனக்குழுக்களை இடம்பெயரச்செய்வது, பொருளாதார வாழ்வாதாரங்கள் பாதிப்படைச்செய்வது, மன்னாரில் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பு உள்ளிட்ட விடயங்;கள் குறித்து இன, மத போராட்டங்கள் மாகாண சபைகளில் விவாதத்திற்கு வரவில்லை என்பதைக் குறிக்கிறது.
மாகாண சபைகள் தொடர்ந்து ‘காணாமல் போனதால்’ ஏற்பட்ட வெற்றிடம், தீவு முழுவதும் சமூகங்களின் மீது வெளிநாட்டு மற்றும் உள்ளுர் கூட்டு நிறுவனங்கள் நடத்தும் கொள்ளையை தடுத்து நிறுத்துவதற்கான இயலாமையை ஏற்படுத்தியுள்ளது என்றார்.