நுவரெலியா, சீத்தா எலிய பகுதியிலுள்ள சீதை அம்மன் ஆலயத்தில் அசோக வனம் அனுஸ்ரீ தியான மண்டபம் இன்று ஞாயிற்றுக்கிழமை (03) வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினர் இந்தியாவின் ஆன்மீகத் தலைவர் குபா தீதி, சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க, கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் வி.எஸ். இராதாகிருஷ்ணன், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான், சமூக தலைவர்கள் மற்றும் இந்தியா மற்றும் உள்ளூரைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தியானம் மற்றும் ஆன்மீக நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடமான அசோக வனம் அனுஸ்ரீ தியான மண்டபத்திற்கு இந்தியாவின் புது டில்லியைச் சேர்ந்த பக்தர்களால் வழங்கப்படும் தனியார் நன்கொடைகள் மூலம் நிதியளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வில் தனது உரையின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான மக்கள் உறவு தொடர்புகளை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, அவர்களின் ஆன்மீக சேவையின் அடையாளத்தை உயர் ஸ்தானிகர் அடிக்கோடிட்டுக் காட்டினார்.
ஆலயத்தின் பயன்படுத்தப்படாத மகத்தான சுற்றுலா திறனை எடுத்துரைத்த உயர் ஸ்தானிகர், குறிப்பாக இந்தியாவிலிருந்து வரும் யாத்ரீகர்-சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான மேலதிக முயற்சிகளின் அவசியத்தை வலியுறுத்தினார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது, சீதை அம்மன் ஆலயத்தின் உள்கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
அநுராதபுரத்தில் உள்ள புனித நகர வளாகத் திட்டத்தின் அபிவிருத்தி மற்றும் திருகோணமலையில் உள்ள திருக்கோணேஸ்வரம் ஆலயத்தின் விரிவாக்கத்திற்கான ஒத்துழைப்பு வழங்குவதாக அவர் வெளியிட்ட அறிவிப்புகளுக்கு மேலதிகமாக இது வழங்கப்பட்டது.
இந்த முயற்சிகள் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நாகரீக கலாசார பிணைப்புகளை நிரூபிப்பது மட்டுமல்லாமல், இலங்கையின் சுற்றுலாத் துறையை ஊக்கிவிப்பதற்கான இந்தியாவின் நிலையப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன, இதன் மூலம் பொருளாதாரத்திற்கு ஒரு ஊக்கத்தை அளிக்கின்றன.

