இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கியதன் ஊடாக 3.7 பில்லியன் ரூபா வருமானம்!

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கியதன் ஊடாக கடந்த 2024ஆம் ஆண்டில் 3.7 பில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது 2023 ஆம் ஆண்டை விட 13% அதிகரிப்பு என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் வௌியிட்டுள்ள 2024 ஆம் ஆண்டிற்கான செயல்திறன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு 17,010 இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதில் கையடக்க தொலைபேசிகள், தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பிற உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு அதிக எண்ணிக்கையிலான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இரசாயன பொருட்கள், உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் தொழில்துறை மூலப்பொருட்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான உரிமங்களை வழங்குவதும் கடந்த வருடத்தில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2024 ஜூன் முதல் டிசம்பர் வரை கால்நடை தீவனத்திற்காக 300,000 மெற்றிக் தொன் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்வதற்கான இறக்குமதி அனுமதிப்பத்திரம் வழங்குவதற்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, மேற்படி காலப்பகுதிக்குள் 2,222 இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

இது 2023இல் வழங்கப்பட்டதை விடவும் அதிக எண்ணிக்கை என்று இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதற்கு மேலதிகமாக, உள்நாட்டு தேவைகளுக்காக 15,000 மெற்றிக் தொன் தோல் நீக்கப்பட்ட முந்திரி பருப்புகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

கடந்த ஆண்டு தேயிலை இறக்குமதிக்காக 687 அனுமதிப்பத்தரங்கள் வழங்கப்பட்டதாக செயல்திறன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இது 2023 ஆம் ஆண்டை விட அதிகம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *