இனிய பாரதியின் சாரதி “செழியன்” கைது:

கருணா – பிள்ளையான் அணியின் முக்கியஸ்தராக கருதப்படும் ‘இனிய பாரதி’ என்று அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரின் வாகன சாரதியாக செயற்பட்டிருந்த ஒருவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் நேற்று (07) கைது செய்துள்ளனர். 

இக்கைது நடவடிக்கையானது அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளதுடன், 34 வயதுடைய கணகர் வீதி தம்பிலுவில் 01 பகுதியை சேர்ந்த செழியன் என அழைக்கப்படும் அழகரட்ணம் யுவராஜ் இவ்வாறு கைதானவர் ஆவார். 

கைதானவர் கடந்த 2007, 2008, 2009 காலப்பகுதியில் இனிய பாரதியின் சாரதியாக செயற்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது. 

அத்துடன் தற்போது அவர் பொத்துவில் – மட்டக்களப்பு வழித்தட பஸ் சாரதியாக செயற்பட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், பொத்துவில் பகுதியில் இருந்து வழமை போன்று கல்முனை ஊடாக மட்டக்களப்பிற்கு செல்லும் போது கல்முனை பிரதான பஸ் நிலையத்திற்கு அருகில் காத்திருந்த குற்றப்பலனாய்வு பிரிவின் அதிகாரிகள் அவரை கைது செய்ததுடன் அம்பாறைக்கு மேலதிக விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். 

இதேவேளை கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் யுத்த காலத்தில் கருணா அணியின் அம்பாறை மற்றும் திருக்கோவில் பகுதிக்கு பொறுப்பாக இருந்தவருமான கே. புஷ்பகுமார் எனும் இனிய பாரதி கடந்த ஞாயிற்றுக்கிழமை (6) அதிகாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை வலயத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். 

திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள முனியக்காடு பகுதியில் வைத்து அவரது வீட்டில் வைத்து இனிய பாரதி சுற்றி வளைக்கப்பட்டு புலனாய் பிரிவினால் கைது செய்யப்பட்டார். 

அத்தடன் அவரது சகாவான சிவலிங்கம் தவசீலன் என்பவர் மட்டக்களப்பு சந்திவெளி பகுதியில் வைத்து கைதானார். இவர்கள் இருவரும் 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றப் புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

இந்தக் கைதானது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு கடந்த 3 மாதங்களாக விசாரணை செய்யப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் (TMVP) தலைவருமான (பிள்ளையான்) சிவநேசதுரை சந்தாரகாந்தனால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமைவாகவும், 2005 முதல் 2009 ஆம் ஆண்டு வரை நடந்த பல திட்டமிடப்பட்ட குற்றங்களுக்காகவும், பல கடத்தல்கள், காணாமலாக்குதல், கப்பம், அச்சுறுத்துதல்,கொலைகள், சிறுவர்களை பலவந்தமாகத் தனது படையில் இணைத்து போராளியாக்கியது, (சிறுவர் போராளிகள் விவகாரம் 2011 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடப்பட்டுள்ளது) உள்ளிட்ட மேற்குறித்த பல குற்றங்களின் அடிப்படையில் கடந்த காலங்களில் இனிய பாரதிக்கு கல்முனை நீதிமன்றத்தால் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

அத்தோடு மன்னார் மாவட்டத்தில் இலுப்பைக் கடவை வீதியில் தனது சொகுசு ஜீப் வாகனத்தில் 164 கிலோ கேரளா கஞ்சா கடத்திய நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு விடுதலையாகியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அம்பாறையில் இயங்கும் கருணா, பிள்ளையான் குழுவின் பொறுப்பாளராக செயற்பட்டதோடு முன்னாள் மாகாண சபை உறுப்பினராக, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அம்பாறை மாவட்ட இணைப்பாளராகவும் இருந்து செயற்பட்டவர் என்பதும் குறிப்பிடத் தக்கது. 

அதேபோல அம்பாறை, திருக்கோவில், அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் 2006 ஆம் ஆண்டு தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை 7 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பாக இனிய பாரதி கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு இருந்தும் இவ்வாறான குற்ற ஆவணங்களை அழிக்கும் நோக்குடன் அக்கரைப்பற்று நீதிமன்றிற்கு இவர் தீ வைத்ததாகவும் கூறப்பட்டது. 

இதுதவிர, காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவில் இனிய பாரதி குழுவினர் தமது உறவுகளைக் கடத்திக் காணாமலாக்கியது தொடர்பான முறைப்பாடுகளை சாட்சியங்களுடன் பலர் பதிவு செய்திருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *