இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் மற்றும் வர்த்தகம் மற்றும் முதலீட்டு தொடர்புகளை விரிவுபடுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச திங்கட்கிழமை (03) புது டில்லியில் இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பின் (Confederation of Indian Industry – CII) சிரேஷ்ட அதிகாரிகள் பலருடன் கலந்துரையாடினார்.
1895 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இந்தியத் தொழிற்துறை கூட்டமைப்பானது, உற்பத்திகள், சேவைகள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாண்மைகள் ஊடாக 9,000 க்கும் மேற்பட்ட நேரடி அங்கத்தவர்களையும், கிட்டத்தட்ட 300,000 மறைமுக அங்கத்தவர்களைக் கொண்டுள்ள இந்தியாவின் முன்னணி வர்த்தக சங்கமாகும்.
இந்தக் கலந்துரையாடலின் போது, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, தொழிநுட்ப ஒத்துழைப்பு, தொழில்நுட்ப கூட்டாண்மை மற்றும் இந்திய – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் (ISFTA) கீழ் பல புதிய வாய்ப்புகள் தொடர்பில் கலந்துரையாடினார்.
மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் தனியார் துறையால் இயக்கப்படும், புதுமைகளை அடிப்படையாகக் கொண்ட அபிவிருத்தி மாதிரியை மேம்படுத்துவதற்கு நாம் உறுதிபூண்டுள்ளோம்.
இலங்கையின் மறுசீரமைப்புக்குப் பிந்தைய மீட்சியில் பெரும் பங்கை ஆற்றுவதற்கு இந்திய தொழில்துறைக்கு அழைப்பு விடுக்கிறோம். விவசாய பதப்படுத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வழங்கல் சேவைகள், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கு கூடிய வாய்ப்பைப் பெற்றுத் தருகிறோம் என்றார்.
Make in India முன்முயற்சி, டிஜிட்டல் இந்தியா, Industrial 4.0 மற்றும் பசுமை எரிசக்தியை நோக்கித் திரும்பும் முயற்சிகள் உட்பட இந்தியாவின் தொடர்ச்சியான தொழிற்துறை முன்னுரிமைகள் குறித்து CII பிரதிநிதிகளால் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கு பல விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.
இலங்கையுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பு மூலம் இரு தரப்பினருக்கும் பகிர்ந்து கொள்ளப்பட்ட பிராந்திய மதிப்புகள் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று இறுதியில், இரு தரப்பினரும் இணங்கிக் கொண்டனர்.
முதலீட்டு வாய்ப்புகளை அடையாளம் காணவும், இலங்கை ஏற்றுமதி சபைக்கும் இந்திய தொழிற்துறை வலையமைப்புகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும், இலங்கை – இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (CII) வர்த்தக மன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு யோசனை முன்வைத்தார்.
அவ்வாறே, வர்த்தகம் மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மைகள் தொடர்பில் ஆராயும் பொருட்டு CII வணிக முயற்சி பிரதிநிதிகள் குழவினரை கொழும்புக்கு விஜயம் செய்யுமாறும் இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்தார்.
“உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் எழுச்சியானது இலங்கைக்கு ஓர் சவாலாக அமையவில்லை. எனவே, நாம் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு அழைப்பு விடுக்கிறேன்” என்று எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
அதிகளவிலான அரச-தனியார் துறை பங்கேற்புகள் மூலம் நிலையான மற்றும் தொழில்நுட்பம் சார்ந்து தொழிற்படும் பிராந்திய அவிபிருத்தியை ஊக்குவிப்பதற்கு, இலங்கையும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற பொது புரிதலுடனான இணக்கப்பாட்டுடன் சந்திப்பு நிறைவுற்றது.