அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் வெள்ளிக்கிழமை (22) திடீரென வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த வெடிப்பு காரணமாக, ஆலையில் இருந்து கரும்புகை வெளியேறி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெடிப்பைத் தொடர்ந்து வெளியேறும் நச்சுப் புகை காரணமாக, அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக் கோளாறுகளை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த நச்சுப்புகை அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்கு வேகமாகப் பரவி வருவதால், மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு உள்ளூர் அதிகாரிகள் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.
பாதுகாப்புக் காரணங்களுக்காகவும், நச்சுப்புகை பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்காகவும், ஆலையை அண்மித்துள்ள பிரதான நெடுஞ்சாலை மற்றும் அருகில் உள்ள பாடசாலைகள் உடனடியாக மூடப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவம் குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும், நிலைமையைக் கட்டுப்படுத்த தீயணைப்பு மற்றும் அவசர மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வெடிப்புக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் இதுவரை முழுமையாகத் தெரியவரவில்லை. இருப்பினும், மக்களின் பாதுகாப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.