வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவி உட்பட 7 பேரும் நேற்று (27) கைது செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா நகரசபை உள்ளக மண்டபத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கக் கூட்டம் நேற்று காலை இடம்பெற்றபோது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தை சேர்ந்த இரு அணியினருக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டது.
இது தொடர்பில் இரு பகுதியினரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி உட்பட 7 பேர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இதன்போது வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி யோகராசா கனகரஞ்சினி செயலாளர் ஆனந்தன் நடராஜா லீலாதேவி முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த சபிதா ராஸ்திரி வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களான சண்முகராசா சறோஜினிதேவி சிவாநந்தன் ஜெனிற்றா செல்லத்துரை கமலா பேரின்பராசா பாலேஸ்வரி ஆகியோரே கைது செய்யப்பட்டிருந்தனர்.
அந்த 7 பேரும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றிரவு அவர்களை பொலிஸார் பிணையில் விடுவித்துள்ளதுடன், இணக்க சபையில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கையும் எடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.