2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான வாக்களிப்பு/ வாக்கெடுப்பு செப்டெம்பர் 21ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத் தொகை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் மற்றுமொரு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
சனாதிபதித் தேர்தலுக்காக வேட்பாளரொருவரால் அல்லது வேட்பாளர் சார்பாக வேறொருவரால்,
(அ) அந்த வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட அரசியற் கட்சியொன்றினால் பெயர்குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளரொருவராயின்: ரூ. 50,000
(ஆ) அந்த வேட்பாளர் வேறேதேனும் அரசியற் கட்சியொன்றினால் அல்லது வாக்காளர் ஒருவரினால் பெயர்குறித்து நியமனம் செய்யப்பட்ட வேட்பாளரொருவராயின்: ரூ. 75,000
தேர்தல் ஆணைக்குழுவிடம் அல்லது குறித்த கடமைக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள எவரேனுமொருவரிடம் அல்லது இராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வைப்புப் பணமாக வைப்பிலிடப்பட வேண்டுமென குறித்த வர்த்தமானி அறிவித்தலில் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் கட்டளை வெளியிடப்பட்ட நாளான 2024.07.26 ஆந் ஆந் திகதிக்கும் பெயர் குறித்த நியமன நாளான 2024.08.15 ஆந் திகதிக்கு முன்னைய நாளான 2024.08.14 ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் அல்லது அதற்கிடைப்பட்ட காலப்பகுதியினுள் அலுவலக நாட்களில் (சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்கள் தவிர்ந்த) ஏனைய நாட்களில் மு. ப. 8.30 மணி முதல் பி.ப. 4.15 மணி வரையும், 2024.08.14 ஆந் திகதி மாத்திரம் மு.ப. 8.30 மணிமுதல் நண்பகல் 12.00 மணி வரையும் இவ்வைப்ப்புப் பணத்தை செலுத்த முடியும்.
ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்கும் வேட்புமனு தாக்கல் இடம்பெறும் திகதியாக ஓகஸ்ட் 15ஆம் திகதி வியாழக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான வேட்புமனுக்கள் இராஜகிரியவிலுள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்கத்கது.