2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கும் நடவடிக்கைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளன.
இன்று முற்பகல் 11 மணி வரையில் இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
இதற்காக தற்போதய ஜனாதிபதியும், வேட்பாளருமான ரணில் விக்கிரமசிங்க, தற்போதைய எதிர்கட்சித் தலைவர் சஜித் பிறேமதாச ஆகியோர் தேர்தல் ஆணையகத்திற்கு சென்றுள்ளனர். அதைத் தொடர்ந்து தமிழ் பொது வேட்பாளர் பா.அரியனேந்திரன் உட்பட்ட ஏனைய வேட்பாளர்கள் பலரும் வருகை தந்துள்ளனர்.
தற்போது முதல் முற்பகல் 11.30 வரையில் வேட்பு மனு தொடர்பான ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, இராஜகிரியவில் உள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அலுவலகத்தை அண்மித்த பகுதிகள், விசேட பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.