வலுவான இராஜதந்திர அழுத்தத்தைத் தொடர்ந்து, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்த அரசாங்கம் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை உத்தியோகபூர்வ மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஏப்ரல் தொடக்கத்தில் வர்த்தமானியாக வெளியிடப்படும் என்றும் அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடந்த சில வருடங்களாக, பயங்கரவாத தடைச் சட்டத்தை மாற்றியமைப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை உறுதியளித்திருந்தமைக்கு அமைய இப் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முன்வைப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சந்தேக நபர்களை தன்னிச்சையாக காவலில் வைப்பதற்காக பயங்கரவாத தடைச் சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாக கடந்த மூன்று தசாப்தங்களாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுவரும் நிலையில் இப் புதிய சட்டத்தினூடாக அதற்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.