
வலி. கிழக்கு பிரதேச சபையின், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் செல்வராசா மற்றும் அவரின் மனைவி ஆகியோர் வாள்வெட்டு தாக்குதலுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் கடந்த இரவு 8.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.
பிரதேச சபை உறுப்பினர் செல்வராசாவும் அவரது மனைவியும் ஆலய திருவிழாவில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது அவர்களை பின்தொடர்ந்த மூவர் கோப்பாய், மானிப்பாய் வீதியில் அமைந்துள்ள அவரது வீட்டுக்கு முன்பாக வழிமறித்து மனைவி அணிந்திருந்த தங்க நகைகளை அறுக்க முற்பட்ட போது செல்வராசாவும், மனைவியும் நகைகள் அறுப்பதை தடுக்க முயற்சித்த போதே அவர்கள் இருவர் மீதும் வாளால் வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
இதை அவதானித்து அங்கு திரண்டவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
வாள் வெட்டுத் தாக்குதல் மேற்கொண்டவர்கள் தங்களை திருடர்கள் போல் காட்டிக்கொண்டாலும், எந்த ஒரு நகை கூட அபகரிக்காமல் வாள் வெட்டுத் தாக்குதலிலேயே கவனம் செலுத்தியதாக நம்பப்படுகிறது.
ஆகவே இது ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்றும், திசை திருப்புவதற்காகவே திருடர்கள் போல் நாடகமடியுள்ளதாகவும் சந்தேகம் வலுத்துள்ளது.