
அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை, அதிகரிக்கப்பட்ட கடன் வட்டி வீதங்கள், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல பிரச்சனைகளை தீர்க்குமாறு கோரி யாழ்ப்பாணத்திலும் இன்றைய(15) தினம் அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
யாழ்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக இலங்கை அரசியல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
இதேபோன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் வைத்தியர்கள், தாதியர்கள், ஏனைய ஊழியர்கள் உள்ளடங்கலாக வைத்தியசாலை பணியாளர்கள் உட்பட பல தொழிற்சங்க பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வைத்தியசாலை வைத்தியர்கள் ஊழியர்கள் பணி பகிஸ்கரிப்பு காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வெளி நோயாளர் பிரிவுகள் இயங்கவில்லை. அத்தியாவசியமான அவசர சேவை பிரிவு மட்டுமே இயங்குகிறது.
இதனால் இன்றைய தினம் வடமாகாணத்தில் வங்கிகள், தொடரூந்து சேவை, பாடசாலை, அஞ்சல் சேவை, உட்பட்ட பல செயலிழந்துள்ளன.
இவ்வாறு சுமார் 40க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் பணிப் பகிஸ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமையால் பாடசாலைகள், அஞ்சல் நிலையங்கள் உட்பட பல அரசாங்க காரியாலங்கள் மூடப்பட்டுள்ளன.