எதிர்க்கட்சிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமைக்கு அமைய உள்ளுராட்சிமன்றத் தேர்தலை இம்மாதம் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரும், சட்டத்தரணியுமான நிமால் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்களால் அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் எமக்கு கிடைக்கப் பெற்றது. அந்த கடிதத்தில் அவர்கள் எம்மை சந்திக்க எதிர்பார்ப்பதாக விடுத்துள்ள கோரிக்கையை நாம் ஏற்றுக் கொண்டுள்ளோம்.
அதற்கமைய அவர்களை சந்தித்து தேர்தல் தினத்தை தீர்மானிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த நாமும் எதிர்பார்த்துள்ளோம்.
எவ்வாறிருப்பினும் அவர்கள் கோருவதைப் போன்று இம்மாதம் 19ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது.
திறைசேறி செயலாளர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்து அதற்கமையவே தேர்தலை நடத்துவதற்கான தினத்தை தீர்மானிக்க முடியும்.
தேர்தல் இடம்பெற முன்னர் தபால் மூல வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். எனவே அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். அவ்வாறன்றி முதலில் தேர்தலை நடத்துவதற்கு சட்டத்திலும் இடமில்லை.
எனவே 19ஆம் திகதி தேர்தலை நடத்துவது நடைமுறை சாத்தியமற்றது என்பதை நாம் அவர்களுக்கு தெளிவுபடுத்துவோம் என்றார்.