
புதிய துறைமுக நகரமானது கடல்சார் பொருளாதார சட்டத்துடன் கூடிய நிதி மையமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டுமெனவும், அது தொடர்பாக நிபுணத்துவத்தை பெறுமாறும், குழுவொன்றை அமைக்குமாறும் இளம் சட்டத்தரணிகளிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று (25) பிற்பகல் கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் இடம்பெற்ற கொழும்பு றோயல் கல்லூரி சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக பிரபலமற்ற கடுமையான தீர்மானங்களை எடுக்க நேரிட்டதாக தெரிவித்த ஜனாதிபதி, றோயல் கல்லூரி மாணவராக சவால்களை எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையை பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
இந்நாட்டின் சட்டத்துறைக்காக றோயல் கல்லூரி ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் உருவாகக்கூடிய புதிய சட்டத்துறைகள் குறித்தும் இளம் சட்டத்தரணிகளுக்கு எடுத்துரைத்தார்.
துறைமுக நகரத்தை நிதி மையமாக மாற்றுவது தொடர்பான சட்டத்துறை பிரவேசத்திற்காக இளம் சட்டத்தரணிகளை ஊக்குவித்த ஜனாதிபதி, பொறுப்புகள் மற்றும் தலைமைத்துவ பாத்திரங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.