Home தாயக செய்திகள் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் சம்பளமில்லாது விடுமுறையில்!

7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் சம்பளமில்லாது விடுமுறையில்!

18
0

3100 அரச சேவையாளர்களுடன், திணைக்கள அதிகாரிகள், ஒப்பந்த அடிப்படையில் அரச சேவையில் ஈடுப்பட்டவர்கள் உள்ளடங்களாக 7100 இற்கும் அதிகமானோர் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாட்டை தொடர்ந்து உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா, இடம் பெறாதா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. ஆகவே இந்த 3100 அரச சேவையாளர்களை மீண்டும் சேவைக்கு இணைத்துக் கொள்வது தொடர்பில் அரசாங்கம் ஒரு நடவடிக்கையை எடுக்க வேண்டும். தேர்தல்  இடம்பெறும் வரை இவர்களால் சம்பளமில்லாத விடுமுறையில் இருக்க முடியாது என சுயாதீன  பாராளுமன்ற உறுப்பினர்   சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

சபாநாயகர் தலைமையில் வெள்ளிக்கிழமை (24)  இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து ஆளும் மற்றும் எதிர்தரப்பின் உறுப்பினர்கள் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்கள்.

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் இடம்பெறுமா, இடம்பெறாத என்ற சர்ச்சை காணப்படும் பின்னணியில் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் இருக்கும் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் தொடர்பில் விரைவான தீர்மானத்தை எடுக்குமாறு எதிர்க்கட்சி மற்றும் ஆளும் கட்சிகளின் உறுப்பினர்கள் அரச சேவைகள் அமைச்சரும், பிரதமருமான தினேஷ் குணவர்தனவிடம் வலியுறுத்தினார்கள்.

இதன்போது எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன. 3100 அரச சேவையாளர்களுடன் ,திணைக்கள அதிகாரிகள்,ஒப்பந்த அடிப்படையில் அரச சேவையில் ஈடுப்பட்டவர்கள் உள்ளடங்களாக 7100 இற்கும் அதிகமானோர் உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு சம்பளமில்லாத விடுமுறையில் உள்ளார்கள்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படுகிறது. தேர்தல் தொடர்பில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விடுக்கப்பட வேண்டும், அல்லது தேர்தல் இடம்பெறும் வரை சம்பளமில்லாத வகையில் விடுமுறையில் உள்ள அரச ஊழியர்கள் சேவையில் இணைத்துக்கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைக்கு விரைவான பிரச்சினையை எடுக்காவிட்டால் நாட்டில் பிறிதொரு பிரச்சினை தோற்றம் பெறும் என்றார்.

இதன்போது எழுந்து உரையாற்றிய ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க சம்பளமில்லாமல் விடுமுறையில் உள்ள அரச சேவையாளர்கள் தொடர்பில்  பாராளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்ட விடயத்திற்கு நான் உடன்படுகிறேன்.தேர்தல் தொடர்பில் நிச்சயமற்ற தன்மை காணப்படும் போது இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டும்.

இவ்வாறான பிரச்சினை இதற்கு முன்னரும் தோற்றம் பெற்றுள்ளது, அமைச்சரவை கூடாக ஒரு தீர்வு எடுக்கப்பட்டது,ஆகவே தற்போது இந்த பிரச்சினைக்கு அமைச்சரவை மட்டத்தில் ஒரு தீர்வை விரைவாக எடுக்க வேண்டும் என பிரதமரிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.