சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொள்ளும் பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்கள் ஏதும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவில்லை, எந்த நிபந்தனைகளும் எமக்கு தெரியாது, இவ்வாறான பின்னணியில் நாணய நிதியம் தொடர்பான இறுதி தீர்மானத்தை பாராளுமன்றத்தினால் எவ்வாறு எடுக்க முடியும்..? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி தீர்வு பாராளுமன்றத்திடம் என குறிப்பிட்டு ஜனாதிபதி பாராளுமன்றத்தை நெருக்கடிக்குள்ளாக்க முயற்சிக்கிறார். நாணய நிதியத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இணக்கப்பாடுகள் எதையும் பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமல் இறுதி தீர்மானம் எடுக்கும் பொறுப்பை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
ஆகவே சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ளும் பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்வதற்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்பில் பாராளுமன்றத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். பாராளுமன்றில் முன்வைக்கப்படும் கருத்துக்களையும், முடிவுகளையும் உள்ளடக்கியதாக சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவிக்கப்பட்டு அதற்கு அவர்கள் இணங்குகிறார்களா என்பதை பாராளுமன்றிற்கு மீண்டும் அறிவிக்க வேண்டும். அதை விடுத்து தாமாக ஒரு சிலரால் முன்னெடுக்கப்படும் பேச்சுக்களுக்கும், தீர்மானங்களுக்கும் நாம் பொறுப்பேற்கமுடியாது. விபரங்கள் ஏதும் தெரியாமல் நிபந்தனைகளுக்கு எம்மால் ஒத்துழைப்பு வழங்க முடியாது. என்றார்.
சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தொடர்பில் அரச வர்த்தக சங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் வர்த்தக சங்க தலைவருடன் வினவிய போது ஜனாதிபதியின் கருத்தை அவர் மறுத்துள்ளார்.
பொருளாதார மீட்சிக்கான கொள்கை திட்டத்தை எவரும் முன்வைக்கவில்லை என ஜனாதிபதி குறிப்பிடுவது கவலைக்குரியது.
9 ஆவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பித்து வைத்தார்.கடந்த ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பொருளாதார மீட்சி,கடன் மறுசீரமைப்புக்கான 10 குறுகிய கால யோசனை திட்டத்தை முன்வைத்தோம்,
பொருளாதார மீட்சிக்காக முன்வைக்கப்பட்ட 10 யோசனைகள் குறித்து ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை.ஊழல் ஒழிப்பு,பொருளாதார ஸ்திரப்படுத்தல் உள்ளிட்ட பல விடயங்களை சுட்டிக்காட்டியுள்ளோம்.
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டங்கள் முன்வைக்கப்பட்ட போதும்,அவற்றை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அவதானம் செலுத்தவில்லை.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கம் நடைமுறைப்படுத்திய தவறான பொருளாதார முகாமைத்துவ த்தினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆகவே சர்வதேச நாணய நிதியத்தை அரசாங்கம் விரைவாக நாட வேண்டும் என 2020 ஆம் ஆண்டு முதல் குறிப்பிட்டோம்.
பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை, தேவையான அளவு வெளிநாட்டு கையிருப்பு உள்ளது ஆகவே சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் பி.பி.ஜயசுந்தர,இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் குறிப்பிட்டார்கள்.
நாட்டின் பொருளாதார பாதிப்பு தீவிரமடைந்து முழு நாடும் தற்போது அதள பாதாளத்திற்குள் சென்றுள்ள போது பி.பி.ஜயசுந்தர,அஜித் நிவார்ட் கப்ரால் ஆகியோர் காணாமல் போயுள்ளார்கள்.
2020 ஆம் ஆண்டு சர்வதேச நாணய நிதியத்தை நாடியிருந்தால் பணவீக்கம் உயர்வடைந்திருக்காது,நாடும் வங்குரோத்து நிலை அடைந்திருக்காது..
பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு தற்போது சர்வதேச நாணய நிதியத்தை தவிர மாற்றுத் திட்டம் ஏதும் கிடையாது,நாணய நிதியத்தின் ஒத்துழைப்பால் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது.
நாணய நிதியத்திடம் அரசாங்கம் மேற்கொண்டுள்ள இணக்கப்பாடு தொடர்பில் பாராளுமன்றத்தில் விரிவான பேச்சுவார்த்தையை முன்னெடுக்காமல் சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முடியாது என்றார்.