
மாகாண உயர் அதிகாரி ஒருவரின் தலையீட்டால் குறித்த கோம்பயன் மணல் இந்து மயானத்தில் மருத்துவக் கழிவுகளை எரியூட்ட அனுமதிக்க முடியாது என அறிவிக்கப்பட்டமையால் கடந்த இரண்டு நாட்களாக யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது லொறிகளில் ஏற்றப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில் தேங்கிக் கிடப்பதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெல்லிப்பழை வைத்தியசாலையில் எரியூட்டப்பட்டு வந்த யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதனால், ஏற்கனவே யாழ்ப்பாண வைத்தியசாலை நிர்வாகத்தினரால் யாழ் நகரை அண்டிய கோம்பயன் மணல் பகுதியில் யாழ் மாநகர சபையின் அனுமதியுடன் மருத்துவ கழிவுகளை எரியூட்டும் தொகுதியினை நிறுவுவதற்காக யாழ்ப்பாண மாநகர சபையுடன் ஒரு உடன்படிக்கை முன்னெடுக்கப்பட்டு அது செயற்படுத்த தயாராக இருந்த நிலையிலேயே குறித்த அதிகாரியின் அறிவிப்பால் மருத்துவ கழிவுகள் வெளியேற்றப்படாது லொறிகளில் ஏற்றப்பட்டு வைத்தியசாலை வளாகத்தில் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக தொற்று நோய்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும், ஏற்னவே துர் நாற்றம் வீச ஆரம்பித்துள்ளதாகவும், வைத்திய சாலை வளாகம் எங்கும் குறோரீன் வீசப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.