
பிரித்தானியாவில் Strep A தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் குறைந்தது 43 குழந்தைகள் இறந்துள்ளதாக புதிய தரவுகளில் தெரியவந்துள்ளன.
Strep A பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஜனவரி 12ம் திகதி உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தில் 18 வயதுக்கு உட்பட்ட 32 சிறார்கள் Strep A பாதிப்பால் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.
ஸ்காட்லாந்தில், 10 வயதுக்குட்பட்ட மூன்று பேரும், வேல்ஸ் பகுதியில் 15 வயதுக்கு உட்பட்ட ஐவரும், வடக்கு அயர்லாந்தில் மூன்று சிறார்களும் பலியானதாகவும் அத்தகவல் தெரிவிக்கின்றது.
தற்போது இதுவரை 262 மரணங்கள் பதிவாகியுள்ளதாகவும், பாதிப்பு எண்ணிக்கை சத்தமின்றி அதிகரித்து வருவதாகவும் நிபுணர்கள் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப வாரங்களாக Strep A பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டியுள்ள UKHSA அமைப்பு செப்டம்பர் 12 முதல் பிப்ரவரி 12 வரையான கடந்த 5 மாதங்களில் மட்டுமே 44,478 பேர்களுக்கு ஸ்கார்லெட் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால் 2017- 2018 காலகட்டத்தில் 30,768 பேர்கள் ஸ்கார்லெட் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் என்பதும், அக்காலகட்டத்தில் Strep A பாதிப்புக்கு மொத்தம் 354 பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்திருந்ததாகவும் அவ் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.