Home செய்திகள் “யாழ்பாணம் பட்டினத்தின் கலாச்சார மண்டபம்” இன்று (11) திறந்துவைக்கப்பட்டது:

“யாழ்பாணம் பட்டினத்தின் கலாச்சார மண்டபம்” இன்று (11) திறந்துவைக்கப்பட்டது:

24
0

யாழ்ப்பாணத்தில் இந்திய அரசின் நிதி உதவியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “யாழ்பாணம் பட்டினத்தின் கலாச்சார மண்டபம்” இன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதன் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றுகையில், இந்தக் கலாசார மண்டபம் என்பது அனைவருக்கும் பொதுவான ஒன்று. தமிழ் மக்களின் கலாசார மத்திய நிலையமாக இது விளங்கவேண்டும். இதற்கு ‘சரஸ்வதி மண்டபம்’ எனப் பெயர் சூட்ட வேண்டுகோள் விடுக்கின்றேன். ஒரு நாணயத்தின் இரு முகங்கள் போன்று இலங்கை – இந்திய கலாசார இணைப்பு எப்போதும் பிரிக்க முடியாததாக இருக்கும்.- என்றார்.

இதன் போது இந்திய மத்திய இணை அமைச்சர் கலாநிதி எல்.முருகன் உரையாற்றுகையில், இலங்கையில் போர் முடிவுற்ற பின்னரும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட போதும் அயலவர்களுக்கு முதலிடம் என்ற பாரதப் பிரதமரின்  திட்டத்தின் கீழ் இந்தியா பல உதவிகளை வழங்கியுள்ளது. 

மேலும், இந்திய பிரதமரின் வழிகாட்டலுக்கு அமைவாக வடக்கு மாகாணத்திலுள்ள பின் தங்கிய 100 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் திட்டம் ஒன்றையும் ஆரம்பிக்கவுள்ளதாகவும், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பு தொடர்வதை போன்று இரு நாட்டு மக்களுக்கு இடையிலான நட்புகளை தொடர்வதற்கு விமான சேவை மற்றும் கப்பற்சேவைகளை ஆரம்பிக்க வேண்டிய பணிகளை இந்தியா விரைந்து முன்னெடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.

11 மில்லியன் டொலர் இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ் கலாசார நிலையம் 600 பேர் அமரக் கூடிய கேட்போர் கூடமாகும். மேலும் நவீன வசதிகளுடனான அரங்கம் மற்றும் நூதனசாலை உள்ளிட்ட விசேட அம்சங்களைக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.