
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரின் பங்கேற்போடு யாழ்ப்பாண கலாசார மையம்’ கையளிப்பு மற்றும் இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் என்பன நாளை சனிக்கிழமை மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது.
காலை 9 மணிக்கு யாழ்ப்பாண கலாசார மையம் கையளிப்பு நடைபெறும். இந்த நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருடன் இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்துகொள்ளவுள்ளார். அவருடன் பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலையும் பங்கேற்கவுள்ளார்.
இதன் பின்னர் மாலை 5 மணிக்கு இலங்கையின் சுதந்திர நாள் நிகழ்வுகள் யாழ்ப்பாணம் கலாசார மையத்தில் நடைபெறும். இதன்போது வடக்கின் 5 மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் சுதந்திர நாள் ஊர்த்திப் பவனி நடைபெறும். இறுதியாக இரவு 7 மணிக்கு முற்றவெளியில் இசை நிகழ்வு நடைபெறும்.
ஜனாதிபதி செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இரு நிகழ்வுகளிலும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேரடியாக அழைப்பு விடுத்துள்ளதாக தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.