
இலங்கை மக்களின் பிரச்சினைகள், சுமைகளை குறைப்பதில் இந்திய அரசாங்கம் தொடர்ந்தும் உதவிகளை வழங்கும் என இந்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணையமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.
யாழ் பொது நூலகத்தில் இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவி பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்திய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆகியோருடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானும் யாழ்ப்பாணம் இந்திய உதவி உயர்ஸ்தானிகரும் யாழ்ப்பாண நூலகத்தை பார்வையிட்டதோடு, அத்துடன், அங்குள்ள டாக்டர் அப்துல் கலாமின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்திய அரசின் நிதி பங்களிப்பில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தினை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக யாழ்ப்பாணத்துக்கு நேற்று (09) வருகை தந்துள்ள நிலையில் இந்த உதவி திட்டம் வழங்கப்பட்டது.
அங்கு அமைச்சர் எல். முருகன் கூறுகையில், இலங்கை தொடர்ந்தும் பல துன்பங்களை சந்தித்து வருகின்றது. அவ்வாறான நிலையில், மக்களுக்கு உதவி செய்வதில் இந்திய பிரதமர் நரேந்திரமோடி ஆர்வமாக உள்ளார். அதன் வெளிப்பாடுதான் இந்த உதவிகளை செய்கின்றோம் இது மட்டுமன்றி பல்வேறு வகையான அபிவிருத்திகள் இடம்பெற்றுவருவதாக தெரிவித்தார்.
இந்த நிகழ்வின் பின்னர் காங்கேசன்துறைக்கு செல்ல உள்ள அமைச்சர் காங்கேசன்துறைக்கும் காரைக்காலுக்கும் இடையிலான கப்பல் சேவை ஆரம்பிப்பது தொடர்பிலான கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதோடு, நாளைய தினம் (11) இந்திய அரசின் நிதி பங்களிப்பில் புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ள மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்திற்கு செல்ல உள்ளமை குறிப்பிடத்தக்கது.