Home தமிழகச் செய்திகள் பிரபல பின்னணி பாடகி “வாணி ஜெயராம்” அவர்கள் காலமானார்!

பிரபல பின்னணி பாடகி “வாணி ஜெயராம்” அவர்கள் காலமானார்!

60
0

தமிழ்த் திரை உலகில் மட்டுமல்லாமல் இந்தியத் திரை உலகிலும் மறக்க முடியாத பின்னணிப் பாடகர்களில் ஒருவரான வாணி ஜெயராம் அவர்கள் இன்று சென்னையில் அவரது இல்லத்தில் காலமானார்.

1991ல் கலைமாமணி விருதை பெற்றிருந்த நிலையில், 2023ஆம் ஆண்டின் குடியரசு தினத்தை ஒட்டி அவருக்கு “பத்ம பூஷண்” விருது அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதை பெற்றுக்கொள்ளும் முன் அவர் உயிரிழந்திருப்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

திரைத்துறையினரும், இசைத்துறையினரும் இரங்கல்களை வெளியிட்டு வருகின்ற நிலையில், தனிமையாக வீட்டில் காயங்களுடன் வீந்து இறந்துகிடந்த நிலையில் மீட்கப்பட்ட வாணி ஜெயராம் அவர்களின் மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழில் மட்டுமின்றி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், குஜராத்தி, ஒடியா என இந்தியாவின் பெரும்பாலான மொழிகளில் திரையிசைப் பாடல்களைப் பாடியிருக்கிறார் வாணி ஜெயராம்.

வேலூர் மாவட்டத்தில் துரைசாமி ஐயங்கார் – பத்மாவதி தம்பதியின் மகளாக 1945ஆம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி பிறந்த வாணி ஜெயராமின் இயற்பெயர் கலைவாணி.

இவரது பெற்றோருக்கு ஆறு மகள்கள், மூன்று மகன்கள் என மிகப் பெரிய குடும்பம். கலைவாணி அதில் ஐந்தாவது மகள். 

அவரது குடும்பம், இசைப் பாரம்பரியம் கொண்டிருந்தமையால் ஐந்து வயதுக்குள்ளாகவே கர்நாடக இசைப் பாடல்களின் பல்வேறு ராகங்களை அவரால் அடையாளம் காண முடிந்தது.

கடலூர் சீனிவாச ஐயங்கார், டி.ஆர். பாலசுப்பிரமணியன், ஆர்.எஸ். மணி ஆகியோரிடம் தொடர்ந்து கர்நாடக இசையைக் கற்றுவந்த அவர், எட்டாவது வயதில் சென்னை அகில இந்திய வானொலியில் முதல் முறையாகப் பாடினார்.

அவரது மெல்ல வருடும் பாடல்களின் மூலமும் இனிமையான குரலின் மூலமும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடத்தைப் பிடித்தவர்.

திரையுலகிற்கு மட்டுமன்றி, ஈழவிடுதலைப் போராட்டத்திற்கும் வலுச்சேர்க்கும் முகமாக

  1. 1. வீசும் காற்றே தூது செல்லு
  2. 2. பாடும் பறவைகள் வாருங்கள்
  3. 3. வீரன் மண்ணில் புதையும் போது

ஆகிய பாடல்களை பாடி ஈழ விடுதலைப்போரில் எழுச்சியை ஏற்படுத்தியவர். குறிப்பாக ஈழ விடுதலைக்கு பெண் போராளிகளை இணைத்தமையில் இவரின் பாடலுக்கும் பங்குண்டு என்றால் அது மிகையாகாது.

சிறுவயதிலிருந்தே சினிமாவில் பாடும் ஆசை கலைவாணிக்கு இருந்தது. அவரது கணவர் ஜெயராம், அவரை இந்துஸ்தானி இசையைக் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்தவே, உஸ்தாத் அப்துல் ரெஹ்மான் கானிடம் இந்துஸ்தானி இசையைப் பயின்றார். இந்தத் தருணத்தில் தனது வங்கி பணியை விட்டுவிட்டு, இசையையே வாழ்க்கையாகக் கொள்ளத் தீர்மானித்தார் வாணி ஜெயராம். இந்துஸ்தானி இசையின் தும்ரி, கஜல், பஜன் ஆகியவற்றின் நுணுக்கங்களையும் கற்றுக்கொண்ட அவர், 1969ல் மேடையில் பாடகியாக அறிமுகமானார்.

அதன் பின் இந்தியில் புகழ்பெற்ற இசை அமைப்பாளரான வசந்த் தேசாயின் இசையில்  Guddi என்ற படத்தில் மூன்று பாடல்களைப் பாடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒன்றான “போலே ரே பப்பி ஹரா” என்ற பாடலுக்கு “தான்சேன் சம்மான்” விருதும் கிடைத்தது.

1974ல் எம்.எஸ். விஸ்வநாதன் இசையில் தீர்க்க சுமங்கலி படத்தில் வாலி எழுதிய “மல்லிகை என் மன்னன் மயங்கும்” பாடல்தான் அவரை தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் அறிமுகம் செய்தது.

1975ஆம் ஆண்டில் தமிழின் முன்னணி பாடகியாக உயர்ந்தார் வாணி ஜெயராம். அபூர்வ ராகங்கள் படத்தில் அவர் பாடிய “ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்”, “கேள்வியின் நாயகனே” ஆகிய பாடல்களுக்காக அந்த ஆண்டின் சிறந்த பாடகிக்கான தேசிய விருது அவருக்குக் கிடைத்தது.

1980ம் ஆண்டில் கே.வி. மகாதேவன் இசையில் சங்கராபரணம் படத்திற்கு அவர் பாடிய பாடலுக்காக மறுபடியும் இந்தியாவின் சிறந்த பின்னணி பாடகிக்கான விருதைப் பெற்றார் வாணி ஜெயராம் என்பது குறிப்பிடத்தக்கது.