தமிழர் தாயகத்தின் வட பகுதியான யாழ்ப்பாணம் மாவட்டத்தின் – வலிகாமம் வடக்கு, தெல்லிப்பழை பிரதேச செயலகப் பிரிவில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த அரச மற்றும் தனியார் (மக்களது) காணிகளில் ஒரு தொகுதியான 108. ஏக்கர் நிலப்பரப்பு 32 ஆண்டுகளின் பின் இன்று (03) சற்றுமுன்னர் 3.30 மணியளவில் விடுவிக்கப்பட்டது.
இதற்கான நிகழ்வு பலாலி வடக்கு அன்ரனி புரத்தில் இடம்பெற்ற நிகழ்வில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்படுவதற்கான அத்தாட்சி பத்திரத்தினை யாழ்.மாவட்ட படைகளின் கட்டளை மேஜர் ஜெனரல் சுவர்ண போதொட்ட யாழ்.மாவட்ட அரச அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனிடம் வழங்கினார்.
பின்னர் இந்த பத்திரம் அரச அதிபரால் தெல்லிப்பழை பிரதேச செயலர் ச.சிவசிறியிடம் வழங்கப்பட்டது.
இதில் இராணுவக்கட்டுப்பாட்டில் காங்கேசன்துறை மத்தி (ஜெ-234) வெளிச்சவீட்டிலிருந்து காங்கேசன்துறை துறைமுகம் வரையிலான 40 குடும்பங்களுக்கான 26 ஏக்கர் காணியும், அதே கிராம சேவையாளர் பிரிவில் 45 குடும்பங்களுக்கு சொந்தமான இராணுவத்தினரின் பொறியியல் பிரிவு அமைந்துள்ள 24 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது.
மயிலிட்டி வடக்கு –கிராமக்கோட்டில் (ஜே-246) கிராம சேவையாளர் பிரிவில் கவசவாகனப் பிரிவு இருந்த இடத்தில் 17 குடும்பங்களுக்குச் சொந்தமான 16 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டது.
பலாலி வடக்கு அன்ரனிபுரத்தில் அரச காணி விடுவிக்கப்பட்டது. பருத்தித்துறையில், பலாலியில் இடம்பெயர்ந்து தங்கியுள்ளவர்களை இங்கு குடியமர்த்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், 13 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.
கடற்படையின் வசமிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போது அவர் அமைத்த ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாகவுள்ள 20 குடும்பங்களுக்குச் சொந்தமான 20 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் பொதுமக்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், யாழ்ப்பாண மாவட்ட அரச அதிபர் உட்பட அதிகாரிகள், வலி.வடக்கு தவிசாளர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.