
இரண்டு நாள் பயணமாக இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களையும், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணித் தலைவர் சி.வி. விக்னேஸ்வரனையும் இன்று ஒன்றாகச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை முற்பகல் 11.45 மணியளவில் கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் இச் சந்திப்பு நடைபெறவுள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கத்துடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுக்கள் குறித்து இந்தச் சந்திப்பின் போது முக்கியமாக ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு ஜெய்சங்கர் கூறுகையில்;
அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் அது குறித்து அவர் என்ன நினைக்கின்றார் என்பதை ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்தாகவும் 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தி மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவது முக்கியம் என தான் அவரிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இலங்கைத் தமிழ் சமூகத்தின் தேவைகள் குறித்து விசேட கவனம் செலுத்துமாறும் ஜனாதிபதி விக்ரமசிங்கவிடம் ஜெய்சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.