உலகப் புகழ் பெற்ற வீர விளையாட்டுக்களில் ஒன்றான “ஜல்லிக்கட்டு” தமிழ் நாட்டில் சிறப்பாக இடம்பெற்றது.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் அதிகமான காளைகளும், பல நூற்றுக்கணக்கான வீரர்களும் பங்குபற்றிய இந்த ஜல்லிக்கட்டு (காளை அடக்கும் போட்டி) நிகழ்வை பல இலட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர்.
ஒவ்வொரு சுற்றுக்கும் தலா 25 மாடுபிடி வீரர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு சுற்றும் 45 நிமிடம் நடந்தது.
ஆண்களுக்கு சளைத்தவர்கள் இல்லை என்று இளம்பெண்கள் சிலர் தங்கள் காளைகளை போட்டிக்கு அழைத்து வந்தனர். அவை வெற்றி பெற்றதும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.
முதலாம் நாள் ஜல்லிக்கட்டு – அவனியாபுரம்:
நேற்று முன்தினம் அவனியாபுரத்தில் நடந்த காளையடக்கும் “ஜல்லிக்கட்டு” விழாவில் 11 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில், 737 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 10 சுற்றுகளிலும் 3 மாடுகளுக்கு மேல் அடக்கிய வீரர்கள் மட்டும் இறுதிச்சுற்றில் பங்கேற்று காளைகளை அடக்கினர்.
காளைகள் முட்டியதில், மாடுபிடி வீரர்கள் உள்பட 61 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் போலீஸ்காரர், சிறுவன் உள்ளிட்ட 11 பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறப்பாக விளையாடி 28 காளைகளை அடக்கிய மதுரை சோலையழகுபுரம் பகுதியை சேர்ந்த விஜய்க்கு முதல் பரிசாக ரூ.7 லட்சம் மதிப்பிலான கார் வழங்கப்பட்டது.
இரண்டாம் நாள் ஜல்லிக்கட்டு – பாலமேடு:
இரண்டாம நாளான நேற்று பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் – மதுரை மாவட்டம் சின்னப்பட்டியை சேர்ந்த தமிழரசன் என்ற வாலிபர் 23 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்தார். அவருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசாக வழங்கப்பட்டது. 19 காளைகளை அடக்கி 2-ம் இடம் பிடித்த பாலமேடுவை சேர்ந்த மணி என்பவருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டது. பாலமேடு ராஜா, 15 காளைகளை அடக்கி 3-ம் இடம் பெற்றார்.
இதேவேளை இங்கு மாடு முட்டி ஒரு வீரர் பலியானதோடு, மாடுகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்கள் உள்பட 38 பேர் காயமடைந்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.