விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, சித்தார்த்தன் தலைமையிலான புளொட், சுரேஷ் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எப். சிறிகாந்தா தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சி ஆகியனவே இவ்வாறு ஒன்றிணைந்து புதிய கூட்டணியை வடமாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரான விக்னேஸ்வரன் தலைமையில் அமைக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இந்த விடயம் சம்பந்தமாக, கொழும்பில் உள்ள ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரத்தின் இல்லத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் சந்திப்பொன்று நேற்று நண்பகலில் நடைபெற்றிருந்தது.
இந்தச் சந்திப்பில், செல்வம் அடைக்கலநாதன், ஆர்.ராகவன், சுரேஷ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம் எம்.பி. ரெலோ பேச்சாளர் குருசுவாமி சுரேந்திரன், ஹென்றி மகேந்திரன், விந்தன் கனகரட்னம் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது, சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்றிருந்த சந்திப்பு மற்றும் தமிழரசுக்கட்சியின் வெளிப்பாடுகள் தொடர்பில் முதலில் கருத்துக்கள் பரிமாற்றப்பட்டன.
அதனைத்தொடர்ந்து ஏற்கனவே ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் ஒன்றிணைந்து பணியாற்றிய தரப்புக்களாக காணப்படுகின்ற நிலையில் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலினையும் ஒன்றிணைந்து முகங்கொடுப்பது பற்றி ஆராயப்பட்டது. அதற்கு அமைவாக பங்கேற்ற தலைவர்கள் இடையே இணக்கப்பாடு எட்டப்பட்டது.
அதற்கமைவாக, அடுத்துவரும் நாட்களில் ஐந்து கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்கும் முக்கிய கூட்டமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது, உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை முகங்கொடுப்பது, தொகுதிப்பகிர்வு, சின்னம், கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.