இலங்கை விமான சேவைகளின் நிதி தொடர்பிலான 2022, 2023ஆம் ஆண்டுகளுக்கான அறிக்கையின் பிரகாரம் 12.8 பில்லியன் ரூபாய் இழக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இது முதல் அறையாண்டில் இழந்த தொகையாகும். அதில் வெளிநாட்டு செலாவணிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாதமும் நாம் இந்த இழப்புகளை சந்தித்து வருகின்றோம்.
நான் இந்த புள்ளிவிவரங்களை குறிப்பிடுவதற்கு அடிப்படை காரணம் என்னவென்றால் ஒரு தேர்தலை நடத்துவதற்கான செலவு 11 பில்லியன் மட்டும்தான்.
தேர்தலைப்பற்றி பேசுகின்றபோது அதற்கு எவ்வாறு செலவழிப்பது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. ஆனால், ஒரு முறை இலங்கை விமான சேவைக்கு ஏற்படுகின்ற இழப்பு ஒரு தேர்தலுக்கு ஏற்படுகின்ற செலவைவிட அதிகமானதாகும்.
இவ்வாறு பார்க்கும்போது தேர்தலை எவ்வாறு நடத்தவது என்று கேட்டுக்கொண்டு இருப்பது அர்த்தமற்ற விடயமாகும். ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை தேர்தலை நடத்தவேண்டிய அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் துறைசார்ந்த அமைச்சர்களின் கவனத்துக்கு ஒரு விடயத்தை கொண்டு வர விரும்புகின்றேன்.
உங்களது நடத்தைகளின் மூலம் இந்த பாராளுமன்றம் அதன் ஆணையை இழந்திருக்கின்றது. நீதி, அரசியலமைப்பு தொடர்பிலான அமைச்சர் ஒரு விசித்திரமான உரையை இன்று நிகழ்த்தியதாக நான் உணருகின்றேன்.
எதிர்தரப்பிலிருந்து அவர் அந்த உரையை ஆற்றியிருக்க வேண்டும். எதிர்க் கட்சி உறுப்பினரைபோன்றே அவரது இந்த உரை காணப்படுகின்றது.
இந்தத் துறைகளில் நிலவுகின்ற ஊழல்கள் தொடர்பில் எடுத்து கூறியுள்ளீர்கள். அரசியல்வாதிகள், வியாபாரிகளின் ஊழல்கள் தொடர்பில் அவர் எடுத்துரைத்தார்.
நீதி அமைச்சுக்கு பொறுப்பான அமைச்சரே இத்தகைய முறைப்பாட்டை மேற்கொண்டு இருக்கின்றார். அது தொடர்பாக முறைப்பாடு செய்ய வேண்டியது எமது பொறுப்பு. நீதி அமைச்சர் இவ்வாறான முறைப்பாடுகளை செய்யக்கூடாது.
நீதி அமைச்சரின் பணி அதற்கான பரிகாரங்களை மேற்கொள்வதும் சரிசெய்வதும் ஆகும். அதனை ஒரு நாளில் மேற்கொள்ள முடியாது. இந்த பிரச்சினை என்பது பல வருடங்களாக தொடர்ந்து வருகின்றது.
நிதி அமைச்சர் பல தடவைகள் கட்சிகள் தாவியுள்ளார். உண்மையில் அவர் எத்தனை தடவைகள் கட்சி தாவினார் என்பதை நான் மறந்துவிட்டேன்.
கட்சி தாவுவதில் அவர் சாதனை படைத்துள்ளார் என்றார். இதற்கு பதிலளித்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, நான் எவ்வாறு கட்சி தாவினேன் என்ற விடயத்தை நீங்கள் மறக்கக் கூடாது. அரசாங்க கட்சியிலிருந்து எதிர்க் கட்சிக்கு மாறினேன்.
தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றதன் பின்னரே இந்தப் பதவி எனக்குக் கிடைத்தது. எனவே அரசாங்க கட்சியலிருந்தே நான் எதிர்க் கட்சிக்கு கட்சி தாவியுள்ளேன் என்றார்.