
இலங்கையில், மகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக மேற்கொள்ளப்படும் B வலய அபிவிருத்தி, குடியேற்றத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (05.12.2022) காலை மட்டக்களப்பு விவசாய கமநல சங்கங்கள்,பொதுமக்கள்,சிவில்சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து மட்டக்களப்பு கிரான் சந்தியில் ஒன்று கூடி தமது எதிர்ப்பினை தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாகாவலி அபிவிருத்தி திட்டம் ஊடாக மகாவலி B வலயத்தில் உள்ள காணிகளை பிற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
அதாவது, இந்த மகாவலி அபிவிருத்தித் திட்டமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பான்மையாக வாழும் தமிழ், முஸ்லீம் மக்களின் விகிதாசாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் சிங்கள குடியேற்றங்களுக்கு உந்துசக்தியாக அமைந்துள்ளது.
தமிழ் பேசும் மக்கள் வாழும் பிரதேசங்களில் இதுவரை சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இல்லாத நிலையில் அபிவிருத்தி திட்டம் என்ற போர்வையில் பொலனறுவை, அம்பாறை மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள காணிகளை வழங்குவதன் ஊடாக எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒரு சிங்கள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை கொண்டு வர முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த மகாவலி அபிவிருத்தித் திட்டம் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிக்கும் திட்டம் என தமிழ் மக்கள் கருதியே இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடாத்த தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.