தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை உணர்வுபூர்வமாக அஞ்சலி செய்வதற்கு தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள் மற்றும் பொது இடங்கள் என்பன எழுச்சிக் கோலம் பூண்டுள்ளன.
பொது இடங்களில் சிவப்பு மஞ்சள் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் பல இடங்களில் மாவீரர்களை நினைவுகூரும் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.
துயிலுமில்லங்களில் இன்று மாலை 6:05 மணிக்கு நினைவுச் சுடர் ஏற்றுவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ள நிலையில் தமிழர் தாயகத்தில் வாழும் அனைத்து மக்களையும் மாவீரர் துயிலும் இல்லங்களிலும், மாவீரர்களுக்கு அஞ்சலி செய்வதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள பொது இடங்களிலும் ஒன்று கூடுமாறு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையும், நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ள ஏற்பாட்டாளர்களும் அறைகூவல் விடுத்துள்ளனர்.
மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும், மாவீரர்களின் கல்லறையில் பன்னீர் தெளிக்கும் இந்த கார்த்திகை மாத்தத்தில் வரும் மாவீரர்களை நினைவு கொள்ளும் புனித நாளான “நவம்பர் 27” இன்று (27-11-2022) நாம் எமது மாவீரர்களை உணர்வு பூர்வமாக அஞ்சலிக்க வேண்டிய தேவையும், கடமையும், தார்மீக உரிமையும் ஒவ்வொரு தமிழருக்கும் உள்ளது.
சிங்கள பேரினவாதத்தின் அடக்கு முறைகளும், அடாவடிகளும் தொடர்ந்தவண்ணம் உள்ள போதும், பொருளாதார சிக்கல்களால் மக்களின் அன்றாட வாழ்வு பாதிக்கப்பட்டுள்ள சூழலிலும், தங்கள் சுகபோகங்களை தூக்கி எறிந்து மண்க்காக்கவும், மக்களின் நிம்மதியான சுதந்திர வாழ்விற்காகவும் தங்கள் உயிர்களை பலவழிகளில் தியாகம் செய்த அந்த புனிதசீலர்களான மாவீரர்களை நெஞ்சுருகி நினைவு கொள்ளும் போது இலங்கை வாழ் ஏனைய சமூகம் மட்டுமன்றி சர்வதேசத்தின் கண்களை விரிவடையச் செய்து அவர்களின் மனச்சாட்சியில் ஓர் சிறிய அதிர்வை ஏனும் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.