இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான மாபெரும் விருதுக் கொண்டாட்டம் “குவியம் விருதுகள் 2022” நிகழ்வு நேற்று (29) சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் (யாழ். மத்திய கல்லூரிக்கு அருகில்) இடம்பெற்றது.
மாலை 5:00 மணிக்கு ஆரம்பமான குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்து கொண்டார்.
சிறப்பு விருந்தினர்களாக யாழ். மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனும், தேசிய கல்வி நிறுவக விரிவுரையாளர் கலாநிதி எஸ்.ஸ்ரீபிருந்திரனும், யாழ். மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இரட்னராசா கிருஷ்ணகுமாரும், கிருபா லேனர்ஸ் உரிமையாளர் அழகசுந்தரம் கிருபாகரனும், “கனடா தமிழ் பசங்க” வின் தயாரிப்பு முகாமையாளர் (இலங்கை) வீணா AE உம், ஏ.ஆர்.சி. மொபைல் சார்பாக சிவசாமி கஜனும் கலந்துகொண்டிருந்தனர்.
இதேவேளை கௌரவ விருந்தினர்களாக இசைவாணர் கண்ணன், ஒளிப்பதிவாளர் கே.கமலதாசன் மற்றும் சினிமா செயற்பாட்டாளர் மணிவாணன் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.
நூற்றுக்கணக்கான படைப்புக்களில் இருந்து வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, அவர்களினதும், அவர்களின் படைப்புக்களின் பெயர்களும் மேடையில் அறிவிக்கப்பட்டு விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.