Home தாயக செய்திகள் தேர்தலை நடத்துமாறு கோரி நீதிமன்றம் செல்லும் உரிமை மக்களுக்கு உண்டு!

தேர்தலை நடத்துமாறு கோரி நீதிமன்றம் செல்லும் உரிமை மக்களுக்கு உண்டு!

47
0

மாகாண சபைத் தேர்தல்களை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். குறித்த காலத்திற்குள் தேர்தலை தேர்தல்கள் ஆணைக்கழு நடத்தாது போனால் நீதிமன்றத்தை நாடும் உரிமை பொது மக்களுக்கு உண்டு என முன்னாள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக நான் இருந்த காலத்தில் என்னால் தான் மாகாண சபை தேர்தல்கள் நடத்த முடியாது போனதாக என் மீது குற்றம் சுமத்த வேண்டாம் எனவும் அவர் குறிப்பிட்டார். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மேலும் கூறுகையில், “மாகாண சபை தேர்தல் கால தாமதித்த குற்றச்சாட்டு என் மீது திணிக்கப்பட்டுள்ளது. இதுதான் அநேகமானோர் விட்டுள்ள தவறாகும்.

மாகாண சபை தேர்தலை காலம்தாழ்தியது நான் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால் சட்ட வரைபுகளை சரியாக அறிந்துகொள்ளாமல், நான்தான் மாகாண சபை தேர்தலை காலம்தாழ்த்தியுள்ளதாக சமூகமயப்படுத்தியுள்ளனர். முதலில் உண்மை எது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

மாகாண சபை தேர்தலுக்காக எல்லை நிர்ணய குழுவொன்று அப்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்டிருந்தது. ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட எல்லை நிர்ணய குழு குறித்த அறிக்கையை என்னிடம் சமர்ப்பித்தது.

அந்த குழுவின் அறிக்கை அங்கீகரிக்கப்பட வேண்டுமெனில், பாராளுமன்றில் 3இல் 2 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட வேண்டும். இருப்பினும், அது பாராளுமன்றில் நிராகரிக்கப்பட்டது. இந்த அறிக்கையை சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் நிராகரித்திருந்தனர். நான் மாத்திரம்தான் அந்த அறிக்கையை அங்கீகரித்திருந்தேன்.

அப்போதைய மேன் முறையீட்டு குழுத் தலைவராக தற்போதைய ஜனாதிபதியே இருந்தார். எல்லை நிர்ணய அறிக்கையின் மேன்முறையீட்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவில்லை. அதன் பின்னர் வந்த பிரதமரும் எல்லை நிர்ணய அறிக்கையின் மேன்முறையீட்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிக்கவில்லை. 

இப்போதும்கூட எல்லை நிர்ணய அறிக்கையின் மேன்முறையீட்டு அறிக்கையை ஜனாதிபதியிடம் பிரதமர் கையளித்து நாளைய வேண்டுமானாலும், மாகாண சபை தேர்தலை வைக்க முடியும். என்மீது குற்றம் சுமத்துபவர்கள் முதலில் உண்மை தெரிந்து கொள்ள வேண்டும்.

மாகாண சபைத் தேர்தல்களை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் நடத்துவதற்கான பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. ஜனநாயக நடாடென்ற ரீதியில் குறித்த காலத்திற்குள் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்.

அவ்வாறு மாகாண சபைத் தேர்தல்களை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் தேர்தல்கள் ஆணைக்குழு நடத்தாது போனால் நீதிமன்றத்தை நாடும் உரிமை பொது மக்களுக்கு உண்டு ” என்றார்.