தேர்தல் முறைமை திருத்தம் என்ற போர்வையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தாத 17 எதிர்க்கட்சிகள் இணைந்து கூட்டறிக்கையொன்றில் கைசாத்திட்டுள்ளன.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று வியாழக்கிழமை எதிர்க்கட்சிகளுக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இக்கூட்டறிக்கை கைசாத்திடப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநாயக இடதுசாரி முன்னணி, 43 ஆம் படையணி, பிவிதுரு ஹெல உருமய, ஸ்ரீலங்கா மஹாஜன கட்சி, இலங்கை சமசமாஜ கட்சி, ஸ்ரீலங்கா கமியூனிடிஸ் கட்சி, நவ லங்கா நிதஹஸ் பக்ஷய, ஜனநாயக மக்கள் முன்னணி, விஜயதரணி தேசிய சபை, முன்னிலை சோஷலிஸ கட்சி, உத்தர சபா உள்ளிட்ட கட்சிகள் இந்தக் கூட்டறிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.
இக்கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்குபற்றலுடன் ஜயவர்தனபுரவில் உள்ள ஹோட்டலொன்றில் கடந்த 12 ஆம் திகதி விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட கட்சித் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் ஏகோபித்த தீர்மானத்தின் படி இந்த கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்தல் சீர்திருத்தம் என்ற போர்வையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் முயற்சித்தால், தனித்தனி கட்சியாகவும், கூட்டாகவும் அதனை கடுமையாக எதிர்ப்பதற்கு அன்றைய கலந்துரையாடலில் ஏகமனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது. அதற்கமையவே நேற்றைய தினம் இது குறித்த கூட்டறிக்கை கையெழுத்திடப்பட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் கையெழுத்திட மக்கள் விடுதலை முன்னணியும் அதன் முழு உடன்பாட்டையும் தெரிவித்துள்ளது.
ஜனநாயகத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு எதிராக மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகள் மற்றும் தொழில் வல்லுநர்கள் உள்ளிட்ட தரப்பிற்கு தனித்தனியாக தெளிவூட்டுவதற்கும், மக்களுக்குத் தெளிவூட்டுவதற்கும், அதற்கு அப்பால் இந்த தன்னிச்சையான செயல்முறை குறித்து சர்வதேச சமூகத்திற்கும் தெரிவிக்கவும் நடவடிக்கை எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.