இந்தியாவிலிருந்து மன்னார் மாவட்டத்தின் சிலாபத்துறை ஊடாக கடத்திவரப்பட்ட சுமார் 5 கோடி ரூபா பெறுமதியான கொக்கேய்ன் போதைப்பொருள் மன்னார் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த இரகசியத் தகவலின் பிரகாரம் புத்தளம் நுரைச்சோலை பகுதியில் தேடுதல் நடவடிக்கைக்காக சென்றிருந்த மன்னார் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் 1 கிலோ 26 கிராம் உயிர்கொல்லி கொக்கேய்ன் போதைப் பொருளை மீட்டதுடன், அதனை உடைமையில் வைத்திருந்த 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக மன்னார் மாவட்டத்தின் நானாட்டான் பிரதேச செயலர் பிரிவில் 48 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதோடு, அவரது வீட்டிலிருந்தும் 506 கிராம் கொக்கேய்ன் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 வயதிற்கும் 54 வயதிற்கும் உட்பட்டவர்கள் எனவும், அதில் நான்கு சிங்களவர்களும், இரு முஸ்லீம்களும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.