இலங்கை தீவில் அரச பயங்கரவாதத்தாலும், பெளத்த, சிங்கள பேரினவாதிகளாலும் நீண்டகாலமாக அடக்கி ஒடுக்கப்பட்டுவரும் தமிழ் மக்களின் உரிமைக் குரலாய் தம் கடமை உணர்ந்து துணிச்சலோடு உண்மை செய்திகளை வெளிக்கொண்டு வந்தமைக்காக படுகொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களை நினைவு கொள்ளும் புனித நாள் இன்று ஒக்டோபர் 19.
தூக்கம் மறந்து, துயர் களைந்து, தம் இனத்தின் விடுதலைக்கு உந்துகோலாய் தங்கள் உயிரையே பணயம் வைத்து ஊடகப்பரப்பில் பணியாற்றி உண்மைகளை வெளிக்கொண்டுவந்தமைக்காய் படுகொலை செய்யப்பட்ட அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் இன்றைய நாளில் எம் நெஞ்சில் நிறுத்தி நாம் (தமிழ் நாதம் ஊடக குழுமம்) அஞ்சலிகளை செலுதி நிற்கின்றோம்.
படுகொலை செய்யப்பட்ட ஈழத் தமிழ் ஊடகப்பணியாளர்களை நினைவு கொள்ளவும், அவர் தம் நினைவுகள் சுமந்து எழுச்சி கொள்ளும் முகமாகவும் பிரித்தானியாவை தளமாக கொண்டியங்கும் “சர்வதேச தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்” கடந்த 2015 ஆம் ஆண்டு “ஈழத் தமிழ் ஊடகப் பணியாளர் படுகொலை நாள்” என ஒக்டோபர் 19 ஐ பிரகடனம் செய்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.