Home செய்திகள் 22 ஆவது திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க முடிவு!

22 ஆவது திருத்தத்துக்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க முடிவு!

38
0

அரசியலமைப்பில் 20 ஆவது திருத்தத்தில் காணப்பட்ட சர்வாதிகார ஏற்பாடுகளை விட, 22 ஆவது திருத்தத்தில் சிறந்த ஏற்பாடுகள் காணப்படுகின்றன. எனவே இத்திருத்தத்திற்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

மக்கள் ஆணைக்கு அஞ்சும் அரசாங்கம் தேர்தலை ஒத்தி வைக்க முயற்சிக்கிறது. இதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தவறுகளை திருத்திக் கொள்வதாகவுள்ள போதிலும் , மக்கள் அவரை மன்னிக்க தயாராக இல்லை என்றும் திஸ்ஸ அத்தனாயக்க குறிப்பிட்டார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

தேர்தலைக் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் வெ வ்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. தேர்தலைக் காலம் தாழ்த்தும் உரிமை அரசாங்கத்திற்குக் கிடையாது. பொது மக்களின் வாக்களிக்கும் உரிமை அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அதற்கு முரணாக எவராலும் செயற்பட முடியாது. எனவே எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் நிச்சயம் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தல்களை விரைவில் நடத்துமாறு மக்கள் ஊடாக அரசாங்கத்திற்கு அழுத்தம் பிரயோகிப்பதற்காக கையெழுத்து பெறும் செயற்திட்டத்தை எதிர்வரும் செவ்வாய்கிழமை முதல் ஆரம்பிக்கவுள்ளோம். 

நாடளாவிய ரீதியில் கையெழுத்தினை சேகரித்து , அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளோம். அதன் பின்னரும் தேர்தல் நடத்தப்படாவிட்டால் அதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடுவோம். அத்தோடு சர்வதேசத்தை நாடவும் தயாராகவுள்ளோம். மக்களின் ஆணைக்கு அஞ்சியே அரசாங்கம் இவ்வாறு செயற்படுகிறது.

தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் , 19 ஆவது திருத்தத்திற்கு நிகரானதல்ல. எவ்வாறிருப்பினும் 20 உடன் ஒப்பிடும் போது இது ஓரளவிற்கு சிறந்த ஏற்பாடுகளைக் கொண்டுள்ளது. எனவே தான் இத் திருத்தத்திற்கு நிபந்தனைகளுடன் ஆதரவளிக்க ஐக்கிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது. இதற்காக நாம் முன்வைத்துள்ள நிபந்தனைகளில் பிரதானமானது , எக்காரணத்திற்காகவும் உள்ளுராட்சி தேர்தல் குறித்த ஏற்பாடுகளில் மாற்றங்களை மேற்கொள்ளக் கூடாது என்பதாகும்.

அதே போன்று பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கான கால எல்லை இரண்டரை ஆண்டுகளாகக் காணப்பட வேண்டும். தற்போது அதனை அதிகரிப்பதற்கு ஆளுந்தரப்பினர் முயற்சித்து வருவதாக தகவல்கள் கிடைக்கப்பட்டுள்ளது. இதனை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. 

அதே போன்று இரட்டை குடியுரிமை குறித்த ஏற்பாட்டிலும் மாற்றங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது. நாம் குறிப்பிட்டுள்ள விடயங்களில் ஏதேனுமொரு சிறிய விடயத்தில் சிக்கல் ஏற்பட்டால் கூட எமது தீர்மானத்தை மாற்றிக் கொள்வோம்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாவலப்பிட்டியில் நடந்த கூட்டத்தில் , ‘நாமும் சில தவறுகளை இழைத்திருக்கின்றோம். அவற்றை திருத்திக் கொள்வோம்.’ என்று தெரிவித்தார். அவர்கள் தவறுகளைத் திருத்திக் கொண்டாலும் , மக்கள் அவர்களை மன்னிக்கத் தயாராக இல்லை என்றார்.